பொங்கலுக்காக சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது திமுக அரசு: அதிமுக
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை திமுக அரசு புலம்ப வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது நிர்வாக திறனற்ற திமுக அரசு. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு!
பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பேருந்து நிலையம் வந்தடைய மக்கள் நடக்க இயலாமலும் பல மணிநேரமாக காத்திருந்தும் பேருந்து கிடைக்காத அவலமும் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு. மக்கள் படும் பாட்டை எல்லாம் எப்படி பார்ப்பார்கள்” என்று விமர்சித்துள்ளார்.