எஞ்சிய கரும்புகளை விற்று அரசுக்கு பணம் செலுத்த நியாயவிலைக்கடை ஊழியர்களை கட்டாயப்படுத்துவதா? அன்புமணி கண்டனம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட எஞ்சிய கரும்பை விற்கும் பணியை நியாயவிலைக்கடை ஊழியர்கள் தலையில் சுமத்துவது நியாயமற்றது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பின் ஓர் அங்கமாக வழங்கப்படும் செங்கரும்புகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ளவற்றை ஒரு கரும்பு ரூ.24 என்ற விலைக்கு விற்பனை செய்து அந்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நடைமுறை சாத்தியமற்ற, நியாயவிலைக்கடை பணியாளர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக நியாயவிலைக்கடை பணியாளர்கள் கடந்த 10-ஆம் நாள் முதல் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நேற்று முன்நாள்  வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த  விடுமுறை ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று மாலை வரை அவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க வேண்டும். அவர்களின் பலர்  வெளியூரைச் சேர்ந்தவர்கள். பொங்கல் பரிசுத் தொகுப்பு பணியை முடித்து, பொங்கலைக் கொண்டாட அவர்களால் சொந்த ஊருக்கு செல்ல முடியுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், எஞ்சிய கரும்பை  விற்கும் பணியை அவர்கள் தலையில் சுமத்துவது நியாயமற்றது; இது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.

 

உண்மை நிலை என்னவெனில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெரும்பான்மையாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பின் அங்கமாக கரும்பு வழங்கப்படவில்லை. கரும்பு இருப்பு இல்லை என்று கூறி பொங்கல் கரும்பு பொதுமக்களுக்கு மறுக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேட்டி – சேலையும் இதே காரணத்தைக் கூறி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் எஞ்சிய கரும்புகளை விற்க வேண்டும் என்று கூறுவது நகைப்புக்குரியது. ஏதேனும் நியாயவிலைக்கடைகளில் கரும்புகள் எஞ்சி இருந்தால் அவற்றை, அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் இதுவரை கரும்பு வழங்கப்படாத மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கும் கூடுதலாக கரும்பு இருந்தால் அவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மாறாக அவற்றை விற்பனை செய்து பணத்தை செலுத்தும்படி நியாயவிலைக்கடை பணியாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *