பொங்கல் வின்னர் அயலானா..? கேப்டன் மில்லரா..? 2வது நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் பார்ப்போமா..?
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியான 4 படங்களின் 2வது நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழில் 4 புதிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் அனைத்தும் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின. ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ள நிலையில், வரும் நாளில் படத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பாக்ஸ் ஆபிஸ் சூழ்நிலையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் எந்தெந்த படங்கள் அதிக வசூல் செய்த பொங்கல் படங்கள் என்று பார்க்கலாம்.
அயலான் :
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், சரத் கெல்கர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் “அயலான்”. ஏலியன் கதையை மையமாக வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரமாண்ட காட்சிகளுடன் வெளியாகியுள்ள அயலான் குழந்தைகளை மேலும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ரூ.3.2 கோடி வசூலித்த நிலையில், 2வது நாளில் வசூல் ரூ.4.25 கோடியாக அதிகரித்துள்ளது.
கேப்டன் மில்லர் :
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், வினோத் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. தனுஷை வைத்து 4வது முறையாக சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே வெளியானது. இதற்கிடையில், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கேப்டன் மில்லர் முதல் நாளில் ரூ.8.7 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.6.75 கோடியும் வசூலித்ததாக sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.
“மெர்ரி கிறிஸ்துமஸ்”:
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முக ராஜன் மற்றும் பலர் நடித்துள்ள படம் “மெர்ரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்திற்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் படமான இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழில் முதல் நாளில் ரூ.22 லட்சங்களையும், 2வது நாளில் ரூ.31 லட்சங்களையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மிஷன் அத்தியாயம் 1 :
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ள “மிஷன் அத்தியாயம் 1”. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படம், அருண் விஜய்யின் முதல் பண்டிகை வெளியீடாகும். முதல் நாளில் ரூ.20 லட்சங்களை வசூலித்த படம், இரண்டாவது நாளில் ரூ. 1 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.