விமானம் தாமதம்.பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்ட பிரபல நடிகை ராதிகா ஆப்தே
சினிமா: பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே (38). இவர் ‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘கபாலி’, ‘வெற்றிசெல்வன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ராதிகா ஆப்தே விமான பயணம் மேற்கொள்ள இருந்தபோது அவர் பயணிக்க இருந்த விமானம் தாமதமாகியுள்ளது.
ஆனால் ராதிகா ஆப்தே மற்றும் அந்த விமானத்தில் பயணிக்க இருந்த மற்ற பயணிகளை, விமானத்தில் ஏற்றுவதாக கூறி, ‘ஏரோப்ரிட்ஜ்’-ல் (விமான நிலையத்தையும், விமானத்தையும் இணைக்கும் பாலம் போன்ற அமைப்பு) பல மணி நேரம் அடைத்து வைத்து, தண்ணீர் கூட தராமல் கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளனர். ராதிகா ஆப்தே இந்த தகவலை வீடியோவுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதன் பிறகே இந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.
ஆனால், அவர் சிக்கிக் கொண்டிருந்தது எந்த விமான நிலையம், எங்கிருந்து எங்கு செல்ல முயன்றபோது இந்த கசப்பான அனுபவம் நேர்ந்தது, அவர் பயணிக்க இருந்த விமான நிறுவனம் எது? என்பன போன்ற தகவலை தெரிவிக்கவில்லை. ராதிகா ஆப்தே வெளியிட்ட அந்தப் பதிவில், “இன்று காலை 8:30 மணிக்கு விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றேன்.
தற்போது 10:50 மணி ஆகிறது. விமானத்தில் இன்னும் ஏறவில்லை. ஆனால் விமான நிறுவனத்தினர் எங்களை விமானத்தில் ஏற்றுவதாக கூறி, ‘ஏரோப்ரிட்ஜ்’-ல் அடைத்து பூட்டினர். சிறிய குழந்தைகள், முதியவர்களுடன் பயணிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளனர். பாதுகாவலர்கள் கதவுகளைத் திறக்க மாட்டார்கள்.
விமானம் எப்போது வரும் என்பது குறித்து ஊழியர்களுக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. நாங்கள் குறைந்தபட்சம் மதியம் 12 மணி வரை இங்கே இருப்போம் என்று எங்களிடம் சொன்னார்கள். அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லை, கழிவறைக்கு செல்ல முடியாது. வேடிக்கையான பயணத்துக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.