துர்கா ஸ்டாலினுக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்த RSS, VHP நிர்வாகிகள்!

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவியார் துர்கா ஸ்டாலினுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி நண்பகல் 12.20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணிகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். மேலும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் துர்கா ஸ்டாலினுக்கு வழங்கினர்.

திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி பல கோவில்களுக்கு செல்வது வழக்கம். பகுத்தறிவு, கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட இயக்கமான திமுகவின் தலைவரின் மனைவி கோவில்களுக்குச் செல்வதை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும் வாடிக்கை. எனினும், முதல்வர் ஸ்டாலின், தனது மனைவியாரின் கடவுள் பக்தி குறித்தும், அவரது விருப்பங்களில் தலையிடுவதில்லை என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.

“எனது மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்குச் செல்வது அவருடைய விருப்பம். அதனை நான் தடுக்கவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்கு தான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. கோயிலும் பக்தியும் அவரவர் விருப்பம், அவரவர் உரிமை சார்ந்தது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *