கோயம்பேட்டில் பெரிய திட்டமா? கற்பனையான குற்றச்சாட்டு வைக்க கூடாது.. கடுகடுத்த சேகர் பாபு
சென்னை: மக்களிடம் கருத்து கேட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக, கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சிஎம்டிஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பஸ்கள் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் ஓராண்டு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனவும் அதன்பிறகு பெரிய திட்டம் ஒன்றை வைத்து இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் அமைக்கப்பட இருப்பதாகவும் பரவலாக பேச்சுக்களும் விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கருத்தை கேட்ட பிறகே எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். பொங்கல் பண்டிகையை சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழும துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு, கோயம்பேடு பேருந்து நிலையம் குறித்து தற்போது அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று கூறினார். அமைச்சர் சேகர் பாபு இது தொடர்பாக கூறியதாவது: கூறுவதற்கு எந்த குற்றச்சாட்டும் அரசின் மீது இல்லை என்றால் இது போன்றுதான் கற்பனையான குற்றச்சாட்டுக்கள் வந்து போகும். அதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை அது இருக்கின்ற இடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அந்த பேருந்து நிலையத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு மக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.
எனவே மக்கள் கருத்துக்களை கேட்ட பிறகுதான் அந்த பேருந்து நிலையத்தை மாற்று பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உண்டான முடிவினை அரசு எடுக்கும். ஒரே ஒரு பதில் என்றால் மக்களுடைய கருத்துக்களை கேட்ட பிறகுதான் கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் அதை ஒட்டியிருக்கிற பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான 16 ஏக்கர் இடத்தையும் எதற்கு பயன்படுத்தலாம் என்ற முடிவு எடுக்கப்படும்” என்றார்.