கீழே பாலம்! மேலே மெட்ரோ! சென்னையில் மிக முக்கிய ஏரியாவில் வரும்.. இரண்டு அடுக்கு மேஜிக்! இதை பாருங்க
சென்னை: சென்னையில் மெட்ரோ பணிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஐடி ஏரியாக்கள் முழுக்க மெட்ரோ + வாகன பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ஓஎம்ஆரில் (ராஜீவ் காந்தி சாலை) ஒருங்கிணைந்த மேம்பாலங்கள் கட்டும் பணியை சென்னை மெட்ரோ ரயில் தொடங்கவுள்ளது. பெருங்குடி, தரமணி, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் நான்கு மேம்பாலங்கள் ஒருங்கிணைந்த முறையில் OMR இல் வரும், மெட்ரோ பாலம் இரண்டாம் நிலை பாலமாக இருக்கும். உயர்மட்ட சாலை மேம்பாலங்கள் அதற்கு கீழே முதல் நிலை மேம்பாலமாக இருக்கும்.
துரைப்பாக்கம் & சோழிங்கநல்லூரில் ரோட்டரி (வட்ட சந்திப்பு அல்லது நான்கு பக்கங்களை இணைக்கும் சந்திப்பு) மேம்பாலம் வரும்.
SRP டூல்ஸ் பகுதியில் T வடிவ மேம்பாலம்,
பெருங்குடியில் எல் வடிவ மேம்பாலம்.
மேம்பாலங்கள் TNRDC & CMRL இடையே செலவை பகிர்ந்து செய்து அதன் அடிப்படையில் கட்டப்படும்.
மெட்ரோ திட்டங்கள்: திருமங்கலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மெட்ரோ கட்டம்-2 திட்டத்தின் கீழ் பல்வேறு மெட்ரோ நிலையங்களை CMRL கட்ட திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயிலோடு சில மாபெரும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அங்கே 12 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் உள்ளே மெட்ரோ செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் செயல்படும் மெட்ரோ நிலையங்கள் போல.. கட்டிடம் உள்ள மெட்ரோ செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக மெட்ரோ ரயில் செல்லும். அங்கு மெட்ரோ ரயில்கள் 12 மாடி கட்டிடத்தின் வழியாகச் சென்று மூன்றாவது மாடி நிலையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டிடத்திற்கான வடிவமைப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேஷன்களுடன் சேர்த்து இந்த கட்டிட மேம்பாடு செய்யப்படும் மற்ற இடங்களான கோயம்பேடு மற்றும் திருமயிலை ஆகியவை 12 மாடி கட்டிடத்தின் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 12 மாடி கட்டிடம் குடியிருப்பு அல்ல.. மாறாக மெட்ரோ பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன பிளான்: கட்டிடங்கள், மெட்ரோ நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஒன்றாகக் கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். மூன்று இடங்களில் நிலையங்கள் கட்டுவதற்கான செலவு கட்டம்-2 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டிற்காக, மாநில அரசிடம் நிதி கோருவோம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.