கோடி, கோடியாய் காசு வைத்திருந்தாலும் இந்த காரை வாங்குவது கடினம்!! மணிக்கு 331கிமீ வேகத்தில் பறக்கும்!
மெக்லாரன் (McLaren) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய 750எஸ் என்ற ஸ்போர்ட்ஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை, என்ஜின் மற்றும் இதர சிறப்பம்சங்களை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் விலை குறைவான கார்களுக்கே மார்க்கெட் பெரியதாக உள்ளது என்றாலும், அதேநேரம் விலையுயர்ந்த கார்களும் அவ்வப்போது புதியது, புதியதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், மெக்லாரன் நிறுவனம் அதன் புதிய 750எஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய மெக்லாரன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.5.91 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூபே மற்றும் ஸ்பைடர் என இரு விதமான வேரியண்ட்களில் புதிய மெக்லாரன் 750எஸ் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. 750எஸ் காரின் இந்த இரு வேரியண்ட்களிலும் மெக்லாரன் எம்840டி என்ஜினின் மெருக்கேற்றப்பட்ட வெர்சன் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, காரின் என்ஜின் சிஸ்டத்தில் புதிய ட்ரிபிள்-லேயர் ஹெட் கேஸ்கெட், ஹை-பிரஷர் டர்போஸ் மற்றும் காரின் பின்பக்கத்தின் மத்தியில் எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த வகையில், புதிய மெக்லாரன் 750எஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள 4.0 லிட்டர் ட்வின்-டர்போ ஃப்ளாட்-பிளேன் வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 750 எச்பி மற்றும் 800 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
முன்பு விற்பனை செய்யப்பட்ட மெக்லாரன் 720எஸ் காரை காட்டிலும் புதிய 750எஸ் 10% கூடுதல் வேகமானது ஆகும். 100kmph வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய புதிய 750எஸ் காரில் 200kmph வேகத்தை 4.4 வினாடிகளிலேயே அடைந்துவிடலாம். இந்த புதிய மெக்லாரன் காரின் டாப்-ஸ்பீடு 331kmph ஆகும். இவ்வளவு அதிவேகமான காரை சாலையிலும் ஓட்ட அனுமதி உண்டு.
இந்த அளவிற்கு இந்த கார் செயல்படுதிறன் மிக்கதாக இருப்பதற்கு ஒரு காரணம் ஆற்றல்மிக்க என்ஜின் என்றால், மற்றொரு காரணம் காரின் எடை ஆகும். புதிய 750எஸ் காரின் எடை வெறும் 1,277 கிலோ மட்டுமே ஆகும். முந்தைய 720எஸ் காரின் எடை இதை விட 30 கிலோ அதிகம். இதனாலேயே, கூடுதல் வேகமானதாக புதிய 750எஸ் கார் விளங்குகிறது. இதற்கேற்ப இந்த காரில், கார்பன் ஃபைபர்-ஷெல்டு அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த காரில் ரேஸ் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. காரின் சேசிஸில் எந்த மாற்றமும் இல்லை. இதனால், 720எஸ் காரை போல் புதிய 750எஸ் காரின் முன்பக்கமும் அகலமானதாக உள்ளது. இருப்பினும், 750எஸ் காரில் புதிய முன்பக்க பம்பர் மற்றும் பெரிய ஏர் இண்டேக்குகளை பழைய 720எஸ் காரில் இருந்து வேறுப்பட்டதாக காண முடிகிறது. அதேபோன்று, காரின் பின்பக்க ஆக்டிவ் இறக்கையின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆக்டிவ் ரியர் விங் பெரியதாக்கப்பட்டு உள்ளதால், புதிய 750எஸ் காரில் முந்தைய 720எஸ் காரை காட்டிலும் மேம்பட்ட டவுன்ஃபோர்ஸ் மற்றும் பிரேக்கிங் திறனை பெறலாம். காருக்கு உள்ளே, டிரைவ் மோட்-ஐ தேர்வு செய்யும் பொத்தான்கள் இடமாற்றப்பட்டுள்ளன. அதேபோல், டேஸ்போர்டு கண்ட்ரோல் மற்றும் காரின் ஏரோடைனாமிக்ஸ் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கான பொத்தான்களும் டிரைவர் எளிதாக அணுகக்கூடிய வகையில் இடமாற்றப்பட்டுள்ளன.