நல்வாழ்வு தரும் தரும் ஞாயிற்றுக்கிழமை சூர்ய வழிபாடு… !
தம் ஒளியால் உலகினை எழச்செய்யும் சூரியனால் தான் எல்லா உயிரினங்களும் இயங்குகின்றன. அதன் மூலம் சக்தியை பெற்றே தாவரங்களும் வளர்கின்றன.
நம் கண்ணுக்கு தெரியும் தெய்வமாக இருப்பது சூரிய பகவான். இவரை தொடர்ந்து வழிபாடு செய்திட வாழ்வில் ஏற்றம் காணலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. தினமும் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொள்ள வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம்.
சூரியன் நவக்கிரகங்களில் நடுநாயகமாக அமைந்துள்ளார். இவரை சிவனோடு இணைத்து சிவ சூரியன் எனவும், விஷ்ணுவோடு இணைத்து சூரிய நாராயணர் எனவும் அழைக்கின்றன புராணங்கள்.
சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்கிறார். சூரியன் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.
சூரியன் பச்சை நிறமுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். சூரியனின் ரதம் பொன் மயமானது என வர்ணிக்கிறது சூர்ய புராணம்.சூரிய பகவான், தன்னுடைய தேரில் நான்கு பட்டணங்களைச் சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குவதாக ஐதிகம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால், சூரிய பகவானின் அருளைப் பெறலாம். சூரிய பகவானை வணங்குவோம். வாழ்வில் சுபிட்சமும் மன நிம்மதியும் பெற்று வளமோடு வாழ்வோம்.