வெறிச்சோடியது சென்னை… திணறிய நெடுஞ்சாலைகள்… சென்னை டூ மதுரை 11.30 மணி நேரம்… லட்சக்கணக்கில் வெளியேறிய மக்கள்!
தமிழகத்தில் எப்போதெல்லாம் பண்டிகைகளும், தொடர் விடுமுறை தினங்களும் வருகின்றனவோ அப்போதெல்லாம் கூடு அடையும் பறவைகளைப் போல சொந்த ஊர் நோக்கி திரும்புகிறார்கள் மக்கள்.
ஒரே நாளில் சென்னை வெறிச்சோடி களையிழந்தது. நாளை ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு இன்னமும் சென்று கொண்டிருக்கின்றனர்.
சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை பேருந்துகளின் பயணித்தவர்கள்.
அதே போல் இன்று பயணம் செய்ய இதுவரை 1,96,310 பேர் சிறப்பு பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
19,484 பொங்கல் சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,006 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.