வெள்ள பாதிப்பு | கரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்
தமிழ்நாட்டில், குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஓபிஎஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 640 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மொத்தம் கிட்டத்தட்ட 3,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கேரளாவில் ஒருவர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தினந்தோறும் 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதாகவும், இந்தப் பாதிப்புக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் ஆளாகியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சுகாதார மையங்களில் பழைய துண்டுச் சீட்டில் மாத்திரைகள் எழுதிக் கொடுக்கக்கூடிய அவல நிலை நிலவுவதாகவும், அதில் மருத்துவரின் கையொப்பமோ அல்லது மருத்துவமனையின் முத்திரையோ இல்லை, நோயாளியின் மருத்துவ விவரம் ஏதும் அதில் இல்லை என்றும், இந்தச் சீட்டைக் காண்பித்து மருந்தகங்களிலிருந்து மாத்திரைகளை பெற முடியாத நிலை நிலவுவதாகவும், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின்தூக்கி பழுதுற்றதன் காரணமாக நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மின்தூக்கியை சரிசெய்ய நீண்ட காலம் ஆகும், எந்தத் துறை எங்குள்ளது என்பதற்கான பெயர்ப் பலகைகள் பொருத்தப்படவில்லை என்றும், நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில் மருத்துவத் துறை சுகாதாரமற்ற துறையாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே இந்த நிலை என்றால், பிற மாவட்டங்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததன் காரணமாக மருத்துவமனைகள் உட்பட பெரும்பாலான இடங்களில் தண்ணீர் புகுந்த நிலையில், மருத்துவமனைகளிலேயே சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகின்ற நிலையில், தென் மாவட்ட மக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. இந்தப் பகுதி மக்களுக்கு மழையினால் ஏற்படும் வைரஸ் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும், கொரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும் மிக அவசியம். மழை நின்று மூன்று நாட்கள் ஆன நிலையில், அங்கு தடுப்பூசி போடும் பணி விரைவில் துவங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் அறிவித்து இருக்கிறார்.
தென் மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி உடனடியாக துவங்கப்பட வேண்டும். என்றும், அந்தப் பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், சுகாதாரமற்ற முறையில் மருத்துவமனைகளை சரி செய்ய போர்க்கால அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்களை நோக்கி மருத்துவம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.