Yuvraj Singh : அந்த பையனை பார்க்கும் போது என்னை பார்க்குற மாதிரியே இருக்கு.. யுவராஜ் சிங் நெகிழ்ச்சி
மும்பை : இந்திய டி20 அணியின் வருங்கால நம்பிக்கையாக பார்க்கப்படும் ரிங்கு சிங் குறித்து உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அவரது வார்த்தைகளால் ரிங்கு சிங் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மெய் சிலிர்த்துப் போய் அதை பகிர்ந்து வருகிறார்கள்.
யுவராஜ் சிங் போன்றே ரிங்கு சிங் இடது பேட்ஸ்மேன். அது மட்டுமின்றி இருவருமே மிடில் ஆர்டரில் தான் பேட்டிங் செய்து இருக்கிறார்கள். மேலும், இருவருமே ஃபினிஷர் என்ற அடையாளத்தை பெற்றவர்கள். இந்த நிலையில், ரிங்கு சிங்கைப் பார்க்கும் போது தன்னைப் பார்ப்பது போலவே இருப்பதாக யுவராஜ் சிங் கூறி இருக்கிறார்.
யுவராஜ் சிங் 2000த்தின் துவக்கம் முதல் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வரை இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். அப்போது சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் அவுட் ஆகி விட்டால் ரசிகர்கள் யுவராஜ் சிங்கை தான் மலை போல நம்பி மேட்ச்சை பார்ப்பார்கள். அந்த காலகட்டத்தில் ஃபினிஷர் என்ற விஷயம் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிதாக பேசப்பட்டு வந்த நேரத்தில் யுவராஜ் சிங் அதன் உச்சத்தில் இருந்தார். அதன் பின் தான் தோனி அந்த இடத்தை நிரப்பினார்.
யுவராஜ் சிங், தோனி போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணியில் சரியான ஃபினிஷர் இல்லாத நிலை இருந்தது. அதைப் போக்கும் வகையில் ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் தன் பயணத்தை துவக்கி இருக்கிறார். விரைவில் அவர் ஒருநாள் அணியிலும் நிரந்தர இடம் பெறுவார் என கூறப்படுகிறது.