சிந்தியா, ஆசாத், மிலிந்த் வரை; காங்கிரஸில் காலியாகும் மூத்தத் தலைவர்கள்!
காங்கிரஸ் மூத்தத் தலைவர் மிலிந்த் தியோரா அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
தியோரா கடந்த காலங்களில் சிவசேனா கட்சி எம்.பி.யிடம் தோல்வி அடைந்தவர் ஆவார். எனினும் இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் ஆவார்.
2020ஆம் ஆண்டு முதல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய சில தலைவர்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
ஜோதிராதித்ய சிந்தியா
குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இவர் 2020 மார்ச் மாதம் காங்கிரஸில் இருந்து விலகி 22 எம்.எல்.ஏ.க்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. தற்போது ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராக உள்ளார்.
ஜிதின் பிரசாதா
காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் கோரி கடிதம் எழுதிய தலைவர்களுள் ஒருவரான இவர், பாஜகவில் இணைந்தார். தற்போது உத்தரப் பிரதேச அமைச்சராக உள்ளார்.
சுஷ்மிதா தேவ்
அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த தேவ், ஆகஸ்ட் 2021 இல் கட்சியை விட்டு விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
ராகுல் அணியின் குறிப்பிடத்தக்க உறுப்பினரான தேவ், அசாமில் தலைமை எடுத்த சில முடிவுகள் குறித்து அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இவர் திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.
கேப்டன் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரான கேப்டன் அமரீந்தர் சிங், 2021ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் அந்தக் கட்சியை பாரதிய ஜனதா உடன் இணைத்தார்.
ஆர்.பி.என் சிங்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங், 2022 ஜனவரியில் உ.பி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த சிங், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்தார்.
கபில் சிபல்
மன்மோகன் சிங் அரசாங்கத்தில் ஒரு மத்திய கேபினட் அமைச்சராக இருந்த கபில் சிபல், 2022 மே மாதம் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக ராஜ்யசபாவிற்கு வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
சுனில் ஜாகர்
காங்கிரஸின் முன்னாள் மாநில பஞ்சாப் தலைவர் சுனில் ஜாகர் கட்சியில் இருந்து வெளியேறி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது பாஜக தலைவராக உள்ளார்.
குலாம் நபி ஆசாத்
ஆகஸ்ட் 2022 இல், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகினார். அன்றைய கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ஐந்து பக்க கடிதத்தில், காங்கிரஸின் நிலைமை “திரும்பப் போவதில்லை” என்று ஆசாத் கூறினார்.
தொடர்ந்து, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். தற்போது ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவராக உள்ளார்.
ஜெய்வீர் ஷெர்கில்
காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2022 ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது இவர் பாஜக செய்தித் தொடர்பாளராக உள்ளார்.