“அடுத்த சுப்பிரமணி ரெடி”.. ஹீரோவாக உருமாறிய புகழ்.. கைகொடுத்த மக்கள் செல்வன் – Mr Zoo Keeper டீசர் இதோ!
கடலூரில் பிறந்து, சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, தனது திறமையால் இன்று உச்சம் தொட்டிருக்கும் நடிகர் தான் புகழ். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “சிரிப்புடா” என்கின்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “கலக்கப்போவது யாரு” மற்றும் “கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்” ஆகிய இரு நிகழ்ச்சிகளும் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ஒரு நடிகர் புகழ் என்றால் அது மிகையல்ல. இந்த சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் வெள்ளித் திரையிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கினார். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான “சிக்சர்” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு லோகேஷ் கனகராஜன் கைதி, சந்தானத்தின் சபாபதி, தல அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை போன்ற பல திரைப்படங்களில் நல்ல பல கதாபத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான “அயோத்தி” திரைப்படத்தில் பாண்டி என்கின்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்து, மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று இருந்தார் புகழ்.
இந்நிலையில் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “காசேதான் கடவுளடா” என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரும் நடிகர் குரேஷியும் துபாய் நாட்டில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய சில விஷயங்கள் பெரிய அளவில் வைரல் ஆனது. ஆனால் அது கமல் அவர்களை கலாய்க்கும் வண்ணம் இருந்ததால், அவருக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கமலஹாசன் அவர்களிடமும் அவருடைய ரசிகர்களிடமும் புகழ் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் நாயகனாக புகழ் களமிறங்குகிறார். j4 ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெ சுரேஷ் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளர் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையில் மிஸ்டர். ஜூ கீப்பர் என்கின்ற திரைப்படத்தில் நாயகனாக புகழ் நடித்திருக்கிறார். தற்பொழுது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.