இது தெரியுமா ? பொங்கலுக்கு மட்டுமல்ல கதம்ப சாம்பாருக்கும் பெயர் பெற்றது..!
இறைவனின் படைப்பில் இயற்கைக்கு நன்றி சொல்லும் இத்திருநாளில் உழவனின் படைப்பில், உழைப்பில் உருவான நாட்டுக் காய்கறிகளை வைத்து செய்யப்படும் காய்கறி கூட்டு..
அல்லது கதம்ப சாம்பார் வாரமானாலும் பொங்கல் வாசனையை வீசி செல்லும். இதை பொங்கல் கூட்டு என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகையில் அனைத்து விதமான நாட்டு காய்கறிகளையும் சமைத்து விடுவோம். பொங்கல் கூட்டு செய்யலாமா? அனைத்து விதமான காய்கறிகளையும் வைத்து சமைப்பதால் அதிக அளவில் கூட்டு இருக்கும். அதனால் கூடுமானவரை அனைத்து காய்கறிகளையும் எண்ணிக்கை 1 வீதம் மட்டும் பயன்படுத்தலாம்.
பொங்கல் கூட்டு
தேவை:
பூசணி – 4 துண்டங்கள்
மொச்சைக் கொட்டை – 1 சிறிய கப்
அவரைக்காய், முள்ளங்கி, வள்ளிக்கிழங்கு, முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், வாழைக்காய், பீட்ரூட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கொத்தவரங்காய் (அனைத்தையும் துண்டங்களாக நறுக்கவும்)- 4 கப்
பச்சை பட்டாணி, பச்சை காராமணி, பச்சை துவரைக் கொட்டை (அனைத்தும் சேர்த்து)- அரை கப்
சாம்பார் வெங்காயம்- 1 கப்
தக்காளி- பொடியாக நறுக்கியது 1 கப்
தேங்காய்த்துருவல் -1 கப்
மஞ்சள் தூள் – 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -காரத்துக்கேற்ப அல்லது பச்சைமிளகாய்
உப்பு, நல்லெண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
தாளிப்பு பொருள்கள்: கடுகு, சீரகம்,வெந்தயம், உ.பருப்பு, க.பருப்பு – தலா 4 டீஸ்பூன், வரமிளகாய் -3, கறிவேப்பிலை.
செய்முறை:
அகன்ற சட்டியில் நறுக்கிய காய்கறிகள், பூசணி துண்டங்கள், மொச்சைக் கொட்டை, பச்சைபட்டாணி, பச்சை காராமணி, பச்சை துவரைக் கொடை அனைத்தையும் சேர்த்து 3 தம்ளர் நீர் விட்டு வேகவைக்கவும். அகன்ற வாணலியில் தாளிப்பு பொருள்களைத் தாளித்து, நறுக்கிய சாம்பார் வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த காய்கறிகளைக் கொட்டி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் அல்லது பச்சைமிளகாயைக் காரத்துக்கேற்ப மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் துருவிய தேங்காயைச் சேர்த்து உப்பு சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலைத் தூவவும்.
பொதுவாக இனிப்புக்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. ஆனால் பொங்கல் பண்டிகையில் வைக்கப்படும் பொங்கல் இனிப்பாக இருந்தாலும், வெண் பொங்கலாக இருந்தாலும் இந்தப் பொங்கல் கூட்டு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இதற்கு சைட் டிஷ் இதுதான் என்ற காம்பினேஷனை இன்றைய தலைமுறையினரே சொல்வார்கள்.
பொங்கல் கூட்டையும் மிஞ்சுவது கதம்ப சாம்பார்.
கதம்ப சாம்பாருக்கு கொடுத்துள்ள பொருள்களுடன் கூடுதலாக துவரம்பருப்பு, பூண்டு, தக்காளிப்பழம் (5) சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவேண்டும். வேர்க்கடலை, கொண்டைக்கடலை, வெள்ளை சென்னா கடலை தலா 1 தேக்கரண்டி வீதம் இரவு ஊறவைத்து குக்கரில் வேகவைத்து சேர்க்கவும். புளிக்கரைசல் சேர்த்து சாம்பார் போன்று வைக்கவேண்டும். தாளிப்பில் வடகம் சேர்க்க வேண்டும். அகன்ற பானையில் அனைத்தையும் கலந்து கொதிவிட்டு இறக்கிய கதம்ப சாம்பாரின் மணம் ஊரையே கூட்டும். பொங்கல் முடியும் வரை மட்டுமல்ல.. பொங்கல் முடிந்த பின்னும் மணத்திலும் சுவையிலும் குறையிருக்காது.
கதம்ப சாம்பாரைத் தினமும் சூடு செய்து சாப்பிட்டால் சுவை கூடும். பானையில் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் இந்த கதம்ப சாம்பாரின் சுவையைப் பொங்கல் பண்டிகையில் மட்டுமே உணரமுடியும்.