Thai Pongal 2024: பஞ்சாங்கம் அடிப்படையில் பொங்கல் வைக்க உகந்த நேரம்; இதை நோட் பண்ணுங்க!
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை தை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள் என்றும் பயிர்கள் செழிக்க உதவிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் வைத்து வழிபடப்படுவதால் சூரியப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது என்று கூறுவதே சரியாக இருக்கும். பொங்கல் பண்டிகை அதற்கு முந்தின நாள் போகிப் பண்டிகை அன்றே தொடங்கிவிடுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று புதுப் பொங்கலுக்கு தயாராகும் நாளாகத் தொடங்குகிறது.
தை முதல் நாளில், பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது. அடுத்தநாள், உழவுக்கு உதவி செய்யும் கால்நடைகளை மரியாதை செய்யும் விதமாக மாட்டுப் பொங்கல் உழவர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை நிறைவு செய்யும் விதமாக அடுத்த நாள் காணும் பொங்கல் அன்று அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
தைப் பொங்கல் ஜனவரி 15-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் சூரிய வீடு அமைத்து சூரியனை வரவேற்பார்கள். அடுத்து, பொங்கல் அடுப்பு திறந்து, புதுப்பானை வைத்து, புது அரிசி இட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படைப்பது வழக்கம். அப்படி பொங்கல் வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும், வளம் பெருகும், மகிழ்ச்சி பெருகும், என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு மிகு தைத் திருநாளான பொங்கல் பண்டிகை நாளில், பஞ்சாங்கப்படி நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து வழிப்படுவது நல்லது. பொங்கல் வைக்க உகந்த நேரத்தை அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்: இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 06.30 முதல் 07.30 வரை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கலாம் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பொங்கல் வைப்பவர்கள் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு திறந்து, புதுப் பானை வைத்து, அதன் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி, புதுத் தண்ணீர் ஊற்றி புது பச்சரிசி இட்டு, வெல்லம் போட்டு பொங்கல் செய்வார்கள்.
பொங்கல் பொங்கி வரும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். பொங்கல் சமைத்த உடன் செங்கரும்பு வைத்து அலங்கரித்து சூரியனுக்கு படையலிட்டு வழிபடுவார்கள்.
அதே நேரத்தில், ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று, காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், இந்த நேரத்தில் பொங்கல் வைக்கக் கூடாது. எனவே, 9 மணிக்கு மேல் சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்ய நல்ல நேரம். எம கண்டம், குளிகை நேரம் தவிர்த்து நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வணங்கினால் வீட்டி வலம் பெருகும், மகிழ்ச்சி பெருகும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.