27 years of Ullathai Allitha: 90-ஸின் ‘அழகிய லைலா’ கார்த்திக் – கவுண்டமணி கூட்டணி மேஜிக் ‘உள்ளத்தை அள்ளித்தா’!
கதாபாத்திரத்தை உள்வாங்கி, ரொம்பவே யதார்த்தமாக நடிப்பதில் கில்லாடி என்று பேரெடுத்தார் நடிகர் கார்த்திக்.
நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் ரியாக்ஷன். இவை எல்லாமே கார்த்திக்கை நவசர நாயகனாக உயர்த்தியது. 80களில் தொடங்கிய கார்த்திக்கின் திரைப்பயணத்தில். ஏகப்பட்ட வெற்றிப் படங்கள். நூறுநாள் படங்கள். வெள்ளி விழாப் படங்கள்.
அந்தவரிசையில் கார்த்திக்கின் நடிப்பில் 1996-ல் வெளிவந்த திரைப்படம்தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’. ரம்பா, கவுண்டமணி, செந்தில், கசன் கான், மணிவண்ணன், ஜெய்கணேஷ், பாண்டு, விச்சு விஸ்வநாத் என பல நடிகர் பட்டாளம் இப்படத்திற்கு உரம் போட்டது. சுந்தர் சி இயக்கிய இப்படத்திற்கு சிர்பி இசையமைத்துள்ளார். பாடல்களை பழனி பாரதி எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ஹீரோவாக முதலில் விஜய்யைத்தான் அணுகினார்களாம். கால்ஷீட் பிரச்சினை. படத்தை உடனடியாக முடிக்க வேண்டும் என்கிற நெருக்கடி காரணமாக கார்த்திக் உள்ளே வந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அழகிய லைலா’ பாடலை 90-ஸின் ‘ரா நூ காவாலய்யா’ எனலாம். அந்தஅளவுக்கு ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.
மிலிட்டரி ஆஃபிசரின் மகன் கார்த்திக். தந்தையின் டார்ச்சரைத் தாங்க முடியாமல் ஊட்டிக்கு தப்பிச் செல்கிறார். அங்கு பிராடு வேலைகளைச் செய்து பிழைக்கும் கவுண்டமணியின் வீட்டில் தங்குகிறார். ரம்பாவைப் பார்த்ததும் உடனே காதலில் விழுகிறார். பல ஆள்மாறட்டக் காட்சி, கலகலப்பு, சண்டை என படம் முழுவதும் ஒரே காமெடி சரவெடி தான்.
இயக்குநர் மணிவண்ணனின் ரூட்டை மாற்றி அவரை பிஸியான நகைச்சுவை நடிகராக்கியதும் இந்தப் படம்தான். கார்த்திக் + கவுண்டமணி + சுந்தர்.சி கூட்டணியில் ஏராளமான திரைப்படங்கள் இதற்குப் பிறகு வெளிவந்தன.குளுகுளு ஊட்டியைக் கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் காதல், நகைச்சுவைத் திரைப்படமாக ‘உள்ளத்தை அள்ளித்தா’வுக்கு ரசிகர்களின் மனதில் இன்றைக்கும் தனியிடம் உண்டு.