பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஜாக்பாட்!

வெளிநாட்டில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கெனவே 6 சீசன் முடிவடைந்துவிட்ட நிலையில், 7வது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இதில், மாயா, விசித்ரா, பூர்ணிமா, விஜய் வர்மா, மணி, விஷ்ணு, கூல் சுரேஷ், பாவா செல்லதுரை, அர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல சண்டைகள், சர்ச்சைகள் என இந்நிகழ்ச்சி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வந்தார்.

அதன்படி, இறுதிப்போட்டிக்கு விஷ்ணு, மாயா, அர்ச்சனா, மணி, தினேஷ் ஆகியோர் நுழைந்தனர். டிக்கெட் டு பைனல் டாஸ்கில் வெற்றிபெற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்தார் விஷ்ணு. வாக்குகளின் அடிப்படையில் மற்ற நான்கு போட்டியாளர்கள் தேர்வானார்கள். இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணிக்கு, விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசனின் இறுதி போட்டி நிகழ்ச்சி தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக கானா பாலா மற்றும் நிக்‌ஷன் ஆகியோர் இணைந்து பாடல் பாடினர். அப்போது பாடலுக்குரிய முன்னாள் போட்டியாளர்கள், மேடையேறி உற்சாகமாக நடனமாடினர்.

இசை விருந்துக்கு பின்னர் இறுதிப்போட்டியாளர்கள், தாங்கள் பிக்பாஸுக்கு வந்ததன் நோக்கத்தை பகிர்ந்து கொண்டனர். பின்னர், பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கமல்ஹாசனிடம் கூல் சுரேஷ், கானா பாலா உள்ளிட்ட போட்டியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு கமல்ஹாசன் பதிலளித்தார். இதையடுத்து சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பு, அறிவு ஆகியோர் இணைந்து, கமல்ஹாசனின் 237வது படத்தை இயக்குகின்றனர் என்ற அறிவிப்பு வெளியானது.

அதைத்தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் அறிவிப்பு வெளியானது. மக்கள் ஓட்டளித்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வானார். இதன்மூலம் வைல்டு கார்ட் என்டரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பட்டம் வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார் அர்ச்சனா.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *