உழவர் பொங்கல்.! வீடு நிறைய பணம் இருந்தாலும்.. வயிறு நிறைய உணவு தேவை- உலகம் வாழ உழவு தேவை
இயற்கையையும், உழவுத் தொழிலையும், தமிழரின் மாண்பையும் பெருமைபடுத்தும் திருவிழா தான் பொங்கல் திருவிழாவாகும். வீடுகளில் வண்ண,வண்ண கோலங்கள் இட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, கரும்பு, பழங்கள், புது பானையில் பொங்கலிட்டு தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை கிராமத்தினர் மட்டுமில்லாமல், வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
உழவர்களின் பொங்கல்
கையில் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் பணத்தை உண்ண முடியாது. உழவு தொழில் தான் வயிறை நிறைய செய்கிறது. அந்த விவசாயத்தை பெருமைப்படுத்தும் வகையில் வெளிநாடு வாழ் தமிழரான சதீஷ் கவிதை எழுதியுள்ளார்.
எங்கள் பொங்கல் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதையில்…
கைவந்த விளைச்சல் எல்லாம் தை வந்தால் தந்துவிட்டு, உழவன் இயற்கைக்கு நன்றி சொல்லும் மகத்தான பண்பு.
ஆகாரம் இல்லாத நாட்டில் பொருளாதாரம் என்ன செய்யும்.
வீடு நிறைய பணம் இருந்தாலும்,
மனம் நிறைய ஆசை இருந்தாலும்,
வயிறு நிறைய உணவு தேவை. உலகம் வாழ உழவு தேவை. உழவின் பெருமை எடுத்துச் சொல்லும் தமிழர் பெருமை பாடுகிறேன்.
எந்த தொழில் செய்தவர்க்கும் இந்த தொழில் உணவு தரும். இது உழவிற்கான பண்டிகையா?
இல்லை உலகிற்கான பண்டிகையா?
பொங்கட்டும், பொங்கட்டும், பொங்கலோ பொங்கல்!
இந்தப் பண்டிகை,
மதங்கள் தாண்டி செல்வதோடு,
நாடுகள் தாண்டிச் செல்லட்டும். உழவின் பெருமை சொல்லட்டும்.
பொங்கட்டும்,பொங்கட்டும்,பொங்கலோ பொங்கல்!