ஓய்வுக்கு பிறகு இதத் தான் செய்யப் போறேன்… மனம் திறந்த தல தோனி !
இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் தல தோனி. அதேபோல் இளம் வீரர்கள் பலரையும் இந்திய அணிக்கு கொண்டு வந்து வாய்ப்பு கொடுத்து உருவாக்கியவர்.
விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் வரை உருவாக்கியுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக டிராபியை வென்றது. இந்த சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், லீக் போட்டியின் போது அதெல்லாம் இல்லை என தோனி கூறினார். கடைசியாக உடல்நிலையை பொறுத்து தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடர் நெருங்க நெருங்க ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் வைரலானது. இது ஒரு புறம் இருந்த நிலையில், சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தோனி கேப்டனாக இடம் பெற்றிருந்தார். இதன் மூலமாக ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் தோனி விளையாடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.தற்போது 42 வயதாகும் நிலையில், வரும் ஜூலை மாதம் 43 வயதை எட்டிவிடுவார். ஆதலால், அடுத்தடுத்த சீசன்களில் விளையாடுவது என்பது முடியாத காரியமாக இருக்க கூடும். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்று தோனியிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த தோனி கூறியிருப்பதாவது, ஓய்விற்கு பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று இதுவரை நான் யோசிக்கவில்லை. இன்னமும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதால் அதற்கான நேரமும், காலமும் இன்னும் வரவில்லை. ஓய்விற்கு பிறகு என்ன செய்ய போகிறேன் என்பதை யோசிக்க ஆர்வம் இருக்கிறது.ஆனால், கண்டிப்பாக ராணுவத்திற்கு என்று கூடுதல் நேரம் செலவிடுவேன். இதுவரையில் கடந்த சில ஆண்டுகாலமாக என்னால் போதுமான நேரம் செலவிட முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். ராணுவத்தில் தோனி பாராசூட் படைப்பிரிவில் லெப்டினண்ட் கர்னல் என்ற பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.