சென்னை – அயோத்தி ஸ்பைஸ்ஜெட் விமான சேவை! டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
அயோத்தி ராமர் கோயில் திறப்பு மற்றும் ராம லாலா சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி நோக்கி படையெடுப்பார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை காண வருவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில் மற்றும் விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் ஏதுவாக சென்று வர வசதியாக சென்னை, பெங்களூரு, மும்பை நகரங்களில் இருந்து விமானங்களை நேரடியாக இயக்க ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
அதன்படி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னை, பெங்களூரு, மும்பை நகரங்களில் இருந்து அயோத்திக்கு நேரடிய விமான சேவை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 189 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் வகையில் Boeing 737 aircraft விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அதேநாளில் அயோத்தில் இருந்து பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக விமானங்களை இயக்க உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறி உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு மட்டுமின்றி ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த வாரம், அயோத்தி – டெல்லி இடையிலான சிறப்பு விமான சேவை வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ராமர் கோயில் திறப்பு குறித்து பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோயில் கும்பாபிஷேகத்தன்று லட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ளதாகவும், அன்று ஒருநாளில் மட்டும் அயோத்தி விமான நிலையத்தில் 100 விமானங்கள் வந்திறங்கும் என்றும் தெரிவித்து இருந்தார். ஸ்பைஸ்ஜெட்டை தொடர்ந்து மற்ற விமான நிறுவனங்களும் அயோத்திக்கு விமான சேவையை இயக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.