KL Rahul: “விலகியிருந்தாலும் எனக்குப் பிடித்த அணி ஆர்சிபி” – மனம் திறந்த ராகுல்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.
எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறிது காலம் ஓய்வில் இருந்தார். ஓய்வுக்குப் பின் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர்களில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனது துல்லியமான ரிவ்யூக்கள் மூலம் கவனிக்க வைத்தார்.
பெங்களூரைச் சேர்ந்த கே. எல் ராகுல் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில்தான் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். சிறப்பாக விளையாடிய இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் தக்க வைத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் சென்று கேப்டனாகச் செயல்பட்டார். தற்போது புதிய அணியான லக்னோ ஜெயின்ட்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கே. எல் ராகுலிடம் தங்களுக்கு பிடித்த மற்றும் நெருக்கமான அணி எது என்று கேட்டதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி)என்று பதிலளித்திருக்கிறார். “2013 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக விளையாடி இருக்கிறேன். சிறு வயதில் என் திறமையை வெளிப்படுத்த ஆர்சிபி அணி எனக்கு நல்ல நல்ல வாய்ப்புகளைக் கொடுத்தது.
நான் பெங்களூரைச் சேர்ந்தவன் என்பதால் ஐபிஎல் தொடர் தொடங்கிய போது நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடக் கனவு கண்டேன். சில வருடங்கள் அவர்களுக்காக விளையாடியது என்னுடைய அதிர்ஷ்டம். ஆர்சிபி அணியில் இருந்து இப்போது விலகி இருந்தாலும் எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான அணி அதுதான்” என்று தெரிவித்திருக்கிறார்.