வாழ்க்கையில் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்! ரசிகர்களுக்கு பொங்கல் தரிசனம் தந்த ரஜினிகாந்த் அட்வைஸ்!

சென்னை: வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தாலே போதும் நிம்மதியாக இருக்கலாம் என நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் மெசேஜ் தெரிவித்துள்ளார்.

 

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன்பாக அவரது ரசிகர்கள் காலையிலேயே குவிந்துவிட்டனர். உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு என முழக்கங்கள் எழுப்பி வந்தனர். ரசிகர்கள் தன்னை பார்க்க திரண்டு வந்ததை அடுத்து தனது வீட்டின் குட்டிச்சுவரில் நின்று பொங்கல் தரிசனம் தந்தார் ரஜினிகாந்த்.

இரண்டு கைகளையும் அசைத்து தனது அன்பை வெளிப்படுத்திய அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கேட்டை திறந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். பொங்கல் வாழ்த்துக் கூறிய ரஜினிகாந்த், வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தாலே போதும் நிம்மதியாக இருக்கலாம் என்ற அறிவுரையையும் இன்று வழங்கினார். ஒழுக்கமும், நேர்மையும் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த பொன்நாளில் தாம் இறைவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மேற்கொண்டு எந்த விவகாரம் பற்றியும் ரஜினி பேசவில்லை.

அதைத் தொடர்ந்து துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய அண்ணாமலை குறித்த ரஜினிகாந்த் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் சொல்ல வந்த அட்வைஸை மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் மின்னல் வேகத்தில் வீட்டுக்குள் சென்றுவிட்டார் ரஜினிகாந்த். இதனிடையே ரஜினிகாந்தை பார்த்த பிறகு பொங்கல் கொண்டாடிய மனதிருப்தி கிடைத்ததாக அங்கிருந்த ரசிகர்கள் கூறினர்.

தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார் ரஜினிகாந்த். அந்த வகையில் இந்தாண்டும் பொங்கல் பண்டிகையொட்டி காட்சி தந்தார். பொங்கல் புத்தாடையாக காக்கி நிற வேட்டியும், வெள்ளை ஜிப்பாவும் அவர் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *