பொதுமக்களுக்கு ஸ்டாலினிடமிருந்து வந்த திடீர் போன் கால்! அட்டெண்ட் செய்த பிறகு காத்திருந்த ஆச்சரியம்!
சென்னை: பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது குறித்து பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் தொலைபேசி வாயிலாக ரெக்கார்ட் வாய்ஸ் மூலம் ஆச்சரியப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
”தமிழர் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1,000 உங்கள் திராவிட மாடல் அரசு கொடுத்திருக்கிறது. கடும் நிதிநெருக்கடிக்கு மத்தியிலும் உங்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்க உங்களில் ஒருவனாக ஸ்டாலின் அன்போடு வழங்கியிருக்கிறேன். தமிழர் திருநாளை குடும்பத்தோடு கொண்டாடி மகிழுங்கள். நன்றி வணக்கம்.” என 21 நொடிகள் ஸ்டாலின் குரல் அந்த தொலைபேசி அழைப்பில் ஒலிக்கவிடப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகையாக அரசு வழங்கிய ரூ.1000ஐ மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் குரலில் இந்த அலைபேசி அழைப்பு செல்கிறது. இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் கூட கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன் என ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்க தாம் எடுத்த நடவடிக்கை பற்றியும் 1,000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது பொங்கலின் மகிழ்ச்சியை மக்கள் மத்தியில் இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எத்தனை நெருக்கடிகள் சூழ்ந்தாலும், தம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் அரசாக தமது தலைமையிலான அரசு தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.