சேலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,400-க்கு விற்பனை @ பொங்கல் பண்டிகை
சேலம்: பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,400-க்கு விற்பனை சேலம் பொங்கல் பண்டிகையை யொட்டி சேலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,400-க்கு விற்பனையானது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வஉசி பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த கார்த்திகை மாதம் முதல் பூக்கள் விலை ஏறுமுகமாக உள்ளது. சபரி மலை ஐயப்பன் சீசன், மார்கழி உற்சவம் என தொடர்ந்து பூக்களுக்கான தேவை அதிகரித்து வந்தது.
மேலும், பனிப் பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பூக்கள் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது, பொங்கல் பண்டிகையையொட்டி வஉசி பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்ற நிலையில், நேற்று கிலோ ரூ.2 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது.
சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம் ( கிலோவில் ): குண்டுமல்லி, முல்லை தலா ரூ. 2,400, சாதிமல்லி, காக்கட்டான் தலா ரூ.1,200, கலர் காக்கட்டான் ரூ.1000, அரளி ரூ.140, செவ்வரளி ரூ.200, நந்தியாவட்டம் ரூ.150, சம்பங்கி ரூ.120, சாதா சம்மங்கி ரூ.150 என்ற விலையில் பூக்கள் விற்பனையானது. பொங்கல் பண்டிகையால் ஒரு வார காலத்துக்கு பூக்களின் விலை அதிகரித்து இருக்கும். பனிக்காலம் முடிந்த பின்னர் பூக்கள் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறினர்.