அடிமூளைச்சுரப்பி கட்டிகள் எப்படி உருவாகின்றன..? அறிகுறிகள்.. சிகிச்சை முறைகளை விளக்கும் மருத்துவர்..!

மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுரப்பியான அடிமூளைச்சுரப்பியிலிருந்தே (பிட்யூட்டரி) அடிமூளைச் சுரப்பி கட்டி உருவாகி வளர்கிறது. அடிமூளை சுரப்பியே, தைராய்டு சுரப்பி, அட்ரீனல் சுரப்பி, பாராதைராய்டு சுரப்பி விரைகள் மற்றும் சினைப்பைகள் போன்ற உடலின் பிற உறுப்புகளை கட்டுப்படுத்துகின்ற பல ஹார்மோன்களை சுரக்கிறது.

அடிமூளைச்சுரப்பி கட்டியின் அறிகுறிகள் என்ன?

அடிமூளைச்சுரப்பி கட்டிகள், அடிமூளைசுரப்பியின் நரம்பியல் சார்ந்த நாளமில்லா கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. கீழ்க்கண்ட மூன்று வழிமுறைகளில் இக்கட்டிகள் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன:

• மேலே குறிப்பிடப்பட்ட ஹார்மோன்களின் மிகைச்சுரப்பின் வழியாக அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இளவயது நோயாளிகளில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் ஹார்மோன் பேருருத் தோற்றத்தை விளைவிக்கிறது. மிக உயரமாக அவர்கள் வளர்வதற்கு இது வழிவகுக்கிறது. வயது வந்த நபர்களில், முக அம்சங்களும், கைகளும், பாவங்களும் பெரிதாக விரிவடையவும் மற்றும் குரல் கரகரப்பாக மாறவும் இயக்குநீர் எனப்படும் ஹார்மோன் அதிகமாக சுரப்பது காரணமாக இருக்கிறது.

அளவுக்கு அதிகமான கார்ட்டிசால் (அண்ணீரகப் புறணி), உடற்பருமனையும், உயர் இரத் அழுத்தத்தையும் மற்றும் நீரிழிவையும் ஏற்படுத்துகிறது. பெண்களில் மாதவிடாய் நின்றுவிடுவதையும் மற்றும் கருத்தரிக்காவிட்டாலும் மற்றும் பிரசவிக்காவிட்டாலும் கூட தன்னிச்சையாக பால்சுரக்குமாறு அதிக அளவிலான பால்சுரப்பு தூண்டுநீர் (புரோலாக்டின்) செய்கிறது.

• இரண்டாவது வழிமுறையாக, அடிமூளைச் சுரப்பியில் உருவாகும் கட்டிகள், 2 முதல் 2.5 செ.மீட்டருக்கும் அதிகமாக வளர்ந்து பெரிதாகும்போது பார்வைத்திறனில் இடையூறுகள் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை விளைவிக்கும் 2.5 செ.மீட்டருக்கும் அதிகமாக அவைகள் மேலும் வளரும்போது மூளைக்குள் மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், தூக்க கலக்கத்தையும், அயர்வையும் உருவாக்கும். உயிருக்கே ஆபத்தானதாக அது மாறக்கூடும்.

• இந்த கட்டிகள், வழக்கமான அடிமூளைச்சுரப்பியை அழுத்தத்துடன் சுருக்கும்போது, தைராய்டு, கார்ட்டிசால் மற்றும் பாலியல் ஹார்மோன்கள் போன்ற முக்கியமான ஹார்மோன்களின் சுரப்பு குறைவதற்கு வழிவகுக்கின்றன. கட்டிகளின் பாதிப்பு அறிகுறிகள் வெளிப்படும் மூன்றாவது வழிமுறையாக இது இருக்கிறது.

அடிமூளை கட்டிகள் எப்படி கண்டறியப்படுகின்றன?

மேற்கூறப்பட்ட பிரச்சனைகள் நோயாளிகளுக்கு இருக்கும்போது, எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனையே சிறந்த ஆய்வு முறையாக இருக்கிறது. அளவில் ஒரு மி.மீட்டருக்கும் குறைவாக கட்டிகள் இருக்கும்போது கூட அவைகளை எம்ஆர்ஐ ஸ்கேன் வெளிப்படுத்தி விடும். இதற்கு சிகிச்சையளிக்க அறுவைசிகிச்சை திட்டமிடப்படுமானால், ஒரு முழு அளவிலான ஹார்மோன் ஆய்வுக்கான இரத்தப்பரிசோதனை செய்யப்படும்.

அடிமூளைச்சுரப்பி கட்டிகளுக்கு சிகிச்சை என்ன?

பெரும்பான்மையான அடிமூளைச்சுரப்பி கட்டிகளுக்கு அறுவைசிகிச்சையே தீர்மானிக்கப்படும் சிகிச்சையாக இருக்கிறது. புரோலாக்டின் எனப்படும் பால்சுரப்பு தூண்டுநீர் இருக்கும் நபர்களுக்கு மருந்துகளை மட்டும் பயன்படுத்தி சிகிச்சையளிக்கலாம். இத்தகைய கட்டிகளுக்கு மூக்கின் வழியாக உட்செலுத்தப்படும் எண்டோஸ்கோப்பி வழியாக அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. பிற அடிமூளைச்சுரப்பி கட்டிகளுக்கு சில மருந்துகள் இருக்கின்ற போதிலும், அவைகளுக்கான செலவு மிக மிக அதிகம். வாழ்நாள் முழுதும் இம்மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியமாக இருக்கும் என்பதால், பெரும்பான்மையான நோயாளிகளின் கைக்கு எட்டாதவாறு இந்த விலையுயர்ந்த மருந்துகள் இருக்கின்றன.

இச்சிகிச்சைக்கான மற்றொரு விருப்பத்தேர்வாக கதிரியக்க சிகிச்சை இருக்கிறது. கட்டியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது அதுவும் குறிப்பாக அறுவைசிகிச்சைக்குப் பிறகும் எஞ்சியிருக்கும் சிறிதளவு கட்டியை கட்டுப்படுத்துகிறது அல்லது அறுவைசிகிச்சைக்குப் பொருத்தமானவராக நோயாளி இல்லாத நிலையில், கதிரியக்க சிகிச்சை அதிக பலனளிப்பதாக இருக்கிறது.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு அடிமூளைச்சுரப்பி கட்டிகள் திரும்பவும் வளருமா?

ஆம். அறுவைசிகிச்சை மற்றும் / அல்லது பிற சிகிச்சைகளுக்குப் பிறகும் அடிமூளைச்சுரப்பி கட்டிகள் வளரக்கூடும். ஆகவே, வாழ்நாள் முழுவதும் நோயாளிகள் மருத்துவர்களது ஆலோசனையைப் பெற்று அவர்களது கண்காணிப்பில் சிகிச்சையை தொடர வேண்டியிருக்கும்.

அடிமூளைச்சுரப்பி கட்டிகள் என்பவை புற்றுக்கட்டிகளா?

அடிமூளைச் சுரப்பியில் புற்று என்பது மிக மிக அரிதானது. தொடக்கநிலை சிகிச்சையை பெற்றதற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுக்கட்டி பரவிய ஒரேயொரு நோயாளியை மட்டுமே நான் இதுவரை பார்த்திருக்கிறேன்.

அடிமூளைச்சுரப்பி கட்டிகள் பரம்பரை நோய்களாக வரக்கூடியவையா?

மிகச்சிறிய அளவிலான நபர்களிடம் மட்டுமே அடிமூளைச்சுரப்பிக் கட்டிகள் பரம்பரை நோய்களாக அல்லது குடும்பங்களில் பிறருக்கும் இருக்கக்கூடியதாக காணப்படலாம். கண்டறியப்படும் மொத்த நேர்வுகளில் இது 5% என்ற அளவுக்குள்ளேயே இருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *