மிஸ் பண்ணிடாதீங்க.. புதிய உச்சத்தை தொட்ட மத்திய அரசு நிறுவன பங்கு- BHEL

மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் கடந்த சில காலாண்டுகள் நஷ்டத்தை சந்தித்தது. இருப்பினும் இந்நிறுவன பங்கு தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மேலும் அந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.அந்த நிறுவனத்தின் பெயர் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட். இந்நிறுவனத்தில் 9.62 சதவீத பங்கு மூலதனத்தை எல்ஐசி நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்.
இந்நிறுவனம் மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.23,364.94 கோடியும், நிகர லாபமாக ரூ.447.55 கோடியும் ஈட்டியிருந்தது. இருப்பினும் இந்த நிதியாண்டின் முதல் 2 நிதியாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2023 ஜூன் காலாண்டு மற்றும் செப்டம்பர் காலாண்டில் முறையே ரூ.351.67 கோடி மற்றும் ரூ.233.41 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனம் இழப்பை சந்தித்துள்ள போதிலும், இந்நிறுவனம் வலுவான வர்த்தக ஒப்பந்தங்களை கையில் வைத்துள்ளது. பிஎச்இஎல் நிறுவனம் ரூ.1,01,461 கோடி மதிப்பிலான ஆர்டர்களை கை வசம் வைத்துள்ளது.மேலும், தற்போது ஒடிசாவில் 3×800 மெகாவாட் என்எல்சி தலபிரா அனல்மின் திட்டத்துக்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான தொகுப்பு பணிக்கான ஒப்பந்த கடிதத்தை எல்எல்சி இந்தியா நிறுவனத்திடம் இருந்து பிஎச்இஎல் நிறுவனம் பெற்றுள்ளது.
ரூ.15,000 கோடி மதிப்பிலான இந்த மைல்கல் ஒப்பந்தமான பிஎச்இஎல் நிறுவனத்தின் வலுவான வர்த்தக செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது மற்றும் நாட்டின் மின்துறை வளர்ச்சியில் ஒரு முக்கிய நிறுவனமாக தன்னை அந்நிறுவனம் நிலை நிறுத்துகிறது.இந்நிறுவனத்துக்கு தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்கள் குவிந்து வருவது இந்நிறுவனத்துக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. மேலும், முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.