இதை தெரிஞ்சிக்கோங்க..! பெயர்கள் மாறினாலும் மகத்துவம் குறையாத உழவர் திருநாள்..!
உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும், உணவுக்காக உழைத்தவனையும் உடன் இருக்கும் உயிரினங்களையும் பெருமைப்படுத்த வேண்டும்,அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் , அவர்களின் உழைப்பு மேன்மை அடைய வேண்டும் என்று கொண்டாடும் பண்டிகை தான் பொங்கல்.
இந்தியாவைத் தாண்டி இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், லாவோஸ், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. மியான்மரில் திங்க்யான் என்ற பெயரிலும், நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதி என்றும், லாவோஸ் மக்களால் பி மா லாவ் என்றும், தாய்லாந்தில் சொங்க்ரான் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலும் வடமாநிலங்களில் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
மகரம் என்றால் சூரியன் என்று பொருள். ஆதவன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிப்பதால் உத்தராயணத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் தொடங்குகிறது. அதனால் இதை மகர சங்கராந்தி என்று வட மாநிலங்களில் கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் லோஹ்ரி என்றும், அஸ்ஸாமில் போகலி பிஹி என்று அன்றைய தினத்தைக் கொண்டாடி வயல் வெளியில் கொட்டகை போட்டு இரவு முழுவதும் அங்கு தங்கி அவர்களின் பாரம்பரிய உடையுடன் ஆடல், பாடல், விருந்து என்று கொண்டாடுவார்கள்.
குஜராத்தில் உத்தராயன் என்று கொண்டாடப்படும் இப்பண்டிகையன்று, வயது பாராமல் அனைவரும் பட்டம் விட்டு மகிழ்வார்கள். ஆந்திராவிலும் தமிழகத்தைப் போலவே நான்கு நாட்கள் போகி, சங்கராந்தி, காணுமு, முக்காணுமு என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.