IND vs AFG : என்ன இதெல்லாம்? கேப்டனின் மெகா சொதப்பல்.. இக்கட்டான நிலையில் பிசிசிஐ
இந்தூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் அடுத்தடுத்து ரோஹித் சர்மா பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து இருக்கும் நிலையில், அவரை 2024 டி20 உலகக்கோப்பை அணிக்கு கேப்டனாக நியமிப்பதில் பிசிசிஐக்கு அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது.
மீதமுள்ள ஒரு டி20 மற்றும் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் ரன் குவிக்கவில்லை என்றால், ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாகவும் வாய்ப்பு உள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் இருப்பார் என்ற நிலையே 3 மாதங்கள் முன்பு வரை இருந்தது. ஆனால், ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா களமிறங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த பிசிசிஐ, ஓராண்டுக்கு பின் டி20 அணியில் ரோஹித் சர்மாவை ஆட வைத்தது.
ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தில் சிக்கி வருவதால் அணியில் நிலையாக இடம் பெறாத ஒருவரை உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக செயல்படுவது சரியாக இருக்காது என்பதாலேயே பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது. மறுபுறம் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் நல்ல ஃபார்மில் இருந்த ரோஹித் சர்மா, அதே ஃபார்மில் டி20 போட்டிகளிலும் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.