Corona Virus : கொரோனா அதிகரிக்கும் நிலையில், பரிசோதனையில் அலட்சியம்!
உருமாற்றம் பெற்ற கொரோனா (JN 1) காரணமாக, தமிழகம் மற்றும் இந்தியாவில் பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதை கடைபிடிப்பதில்லை.
Local Survey Circles எனும் அமைப்பு, 303 மாவட்டங்களில் நவம்பர் 20 – டிசம்பர் 18 2023 இடைப்பட்ட காலத்தில் 24,000 பேர் மத்தியில் செய்த ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 சதவீத மக்கள் மட்டுமே பரிசோதனை செய்துகொண்டதாகவும், தீவிர அறிகுறிகள் உள்ள 9ல் ஒருவர் மட்டுமே பரிசோதனை மேற்கொண்டதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.
எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 82 சதவீதம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்காமல், குறைவாக செய்து பாதிப்பு குறைவாக உள்ளது என்ற தகவல் கொடுக்கிறது.
நேற்றைக்கு முந்தைய நாள், கொரோனா பரிசோதனை, 528 பேருக்கு செய்யப்பட்டு, பாதிப்பு 23 பேருக்கு இருந்தது.
நேற்று (22.12.23) பரிசோதனை 331 பேருக்கு செய்யப்பட்டு, பாதிப்பு 22 பேருக்கு இருப்பது தெரியவந்தது.
தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட பாதிப்பை விட (23 பேர்) நேற்று பாதிப்பு (22 பேர்) குறைவு என தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டாலும், கொரோனா அதிகரிக்கும் சூழலில் பரிசோதனைகளை குறைத்து (528 பேரிலிருந்து, 331பேராக குறைத்தது) பாதிப்பு குறைவு என காட்டுவது தவறாகும்.
தமிழக அரசின் சுகாதார துறையின் கொரோனா பரிசோதனை குறைப்பு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பல்லவா அதிகமாகும்?
சிங்கப்பூரில் சில வாரங்களுக்கு முன்னர் திருச்சியில் இருந்து அங்கு பயணம் மேற்கொண்ட நபருக்கு உருமாற்றம் பெற்ற JN.1 பாதிப்பு கண்டறியப்பட்டும் (அவருக்கு தமிழகத்தில் அந்த தொற்று யாரால், எப்படி ஏற்பட்டது) இதுவரை தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தாமல் இருந்தால் எப்படி உருமாற்றம் பெற்ற கொரோனாவை கண்டறிய முடியும்?
மூலக்கூறு ஆய்வுகளையும் அதிகப்படுத்தாமல் தமிழகத்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா (JN.1) இல்லை என சுகாதாரத்துறை கூறுவதை எப்படி ஏற்க முடியும்.
கொரோனாவை கட்டுப்படுத்த அறிவியல் விதிகளை கடைபிடித்தால் மட்டுமே பலன் கிட்டும். அரசு செவிசாய்க்குமா என மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.