பெண்கள் பெயரைக் குறிப்பிட்டவுடன் Deepfake படங்களை வாரி வழங்கும் கூகுள் சர்ச்!

டீப்ஃபேக் படங்கள் பிரபலமான தேடுபொறிகளில் மிகவும் எளிதாகக் காணக் கிடைக்கின்ற என சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறி தளங்களான கூகுள் மற்றும் மைக்ரோசாப்டின் பிங்க் போன்றவற்றில் டீப்ஃபேக் படங்கள் கொட்டிக் கிடப்பது தெரியவந்துள்ளது.

டீப்ஃபேக் படங்கள் ஒரு நபரின் தோற்றத்தை ஆபாசச் சித்தரித்து உருவாக்கப்படுகின்றன. இவை கூகுள், பிங்க் போன்ற தேடுபொறி தளங்களில் எளிதாகத் தோன்றுகின்றன. அண்மையில் வந்துள்ள செய்தி நிறுவனம் ஒன்றின் அறிக்கையின்படி, பெண்களின் பெயர்களைக் கொண்டு தேடும்போது, பெண் பிரபலங்களின் தோற்றம் கொண்ட டீப்ஃபேக் ஆபாசப் படங்கள் வருகின்றன் என்று சொல்கிறது.

குறிப்பாக, “டீப்ஃபேக்குகள்,” “டீப்ஃபேக் ஆபாசங்கள்” அல்லது “போலி நிர்வாணங்கள்” போன்ற சொற்களை பயன்படுத்தும்போது கிடைக்கும் தேடல் முடிவுகளில் இத்தகைய போலியாக உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் காட்டப்படுவதாக அந்தச் செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தேடுபொறியில் உள்ள ஃபில்டர் (Filter) எதுவும் பயன்படுத்தாத நிலையில் வரும் முடிவுகளை மதிப்பிடுவதற்காக, பாதுகாப்புக் கருவிகள் செயல்படாத நிலையில் வைத்து இந்த ஆய்வுக்கான தேடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கூகுள் மற்றும் பிங் இரண்டிலும் 36 பிரபலமான பெண் பிரபலங்களின் பெயரைக் குறிப்பிட்டு ஆய்வு செய்ததில், கூகுளில் 34 தேடல் முடிவுகளிலும், பிங்கில் 35 தேடல் முடிவுகளிலும் டீப்ஃபேக் படங்கள் மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கான இணைப்புகள் முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளன.

“இத்தகையை படங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு துன்பம் தரக்கூடியது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் தேடலில் கூடுதல் பாதுகாப்பைக் கொண்டுவர நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். எந்தவொரு தேடுபொறியையும் போல, கூகுளும் இணையத்தில் உள்ளதைத்தான் பட்டியலிட்டுக் கொடுக்கிறது. இருப்பினும் எதிர்பாராத, தீங்கு விளைவிக்கும் தளங்களைத் தவிர்ப்பதற்காக எங்கள் தரவரிசை அமைப்புகளை சீரமைக்க இன்னும் விரிவான பாதுகாப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடும் எந்த படம் அல்லது வீடியோவையும் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஒப்புதல் இல்லாமல் அந்தரங்கப் படங்களைப் பகிர்வது (NCII) தனிநபரின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். அத்தகைய செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் தடைசெய்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *