ரஷ்ய அதிபர் புதினுடன் போனில் உரையாடிய பிரதமர் மோடி; எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை
பிரதமர் மோடி திங்களன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள் பற்றி விவாதித்துள்ளார்.
இரு தலைவர்களும் தங்கள் தொலைபேசி உரையாடலின் போது எதிர்காலத்துக்கான திட்டங்கள் பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். இந்த உரையாடல் பற்றி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ரஷ்ய அதிபர் புடினுடன் ஒரு நல்ல உரையாடலை நடத்தினேம். இரு நாடுகளின் கூட்டுறவில் நிகழ்ந்துள்ள பல்வேறு சாதகமான முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். மேலும் எதிர்கால முயற்சிகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்கும் எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டோம்” என்று கூறியுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யாவின் தலைமை உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றி எங்களுக்கு பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியும் புடினும் உக்ரைனைச் சுற்றியுள்ள நிலைமைகள் குறித்தும் விவாதித்தனர். மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும், ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர் என ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக் கூறியுள்ளது.
வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு பற்றியும் இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.
மோடியும் புடினும் கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொலைபேசியில் பேசினர். ஆகஸ்ட் 2023இல் புடினுடன் விண்வெளி ஒத்துழைப்பு, பிரிக்ஸ் குழுவின் விரிவாக்கம் மற்றும் ஜி20 உச்சிமாநாடு உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி விவாதித்திருக்கிறார்.