திடீரென ஓடி சென்று விமானியை பளார் பளார் என கன்னத்தில் அறைந்த பயணி..!
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம் பயங்கர பனிமூட்டம் நிலவியது. இதனால் 110 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கோவா செல்லவிருந்த இண்டிகோ விமானம் பனிமூட்டத்தால் புறப்படாமல் இருந்தது. இதனால் பல மணிநேரமாக பயணிகள் விமானத்திலேயே காத்திருந்தனர்.மீண்டும் பேசிய விமானி பனிமூட்டம் இன்னும் விலகாததால் விமானம் புறப்பட இன்னும் சில மணிநேரம் தாமதமாகும் எனக் கூறினார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த பயணி ஒருவர், தனது இருக்கயைில் இருந்து எழுந்து ஓடிச்சென்று, அந்த விமானியை பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத விமானக் குழுவினரும், அங்கிருந்த பயணிகளும் கூச்சலிட்டனர். பின்னர் அவரை விமானக் குழுவினர் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, அவரை விமான நிலையக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவரது பெயர் சஹில் கட்டாரியா என்பது தெரியவந்தது. விமானம் புறப்பட தாமதமானதால் கோபப்பட்டு விமானியை அறைந்ததாக அவர் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.