டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற வேண்டும்… சுரேஷ் ரெய்னா வலியுறுத்தல்
வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவசியம் இடம் பெற வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதையொட்டி பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை தயார் செய்யத் தொடங்கியுள்ளன. இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் பங்கேற்கின்றன.
மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் 5 அணிகள் இடம் பெறச் செய்ய வைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது-
இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் பந்தில் இருந்தே அவர் அதிரடியாக விளையாட தயங்குவதில்லை. உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
மேலும் குறிப்பிடும் வகையில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸில் அவர் ஏற்கனவே சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இருக்கிறார். அங்கே நடந்த டெஸ்டில் அவர் சதமும் அடித்துள்ளார். இந்த காரணங்களால் அவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும். இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.