பொங்கலுக்கு அதிக இனிப்புகளை சாப்பிட்டால்… கவலை வேண்டாம் இதை செய்தால் போதும்!
அறுவடை திருவிழாவான பொங்கலின் முதல் தை பொங்கல் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை மக்கள் சுற்றுலா சென்று உறவினர்கள், நண்பர்களுடன் காணும் பொங்கலை கொண்டாடுவார்கள்.
இப்படி தொடர் விடுமுறை தினங்களும் கொண்டாட்டங்களும் இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது.
என்றாலே சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவைதான் கொண்டாட்டங்களின் முக்கிய உணவுகளாக இருக்கும். மேலும், பலரின் வீடுகளில் பலகாரங்கள், இனிப்புகள் ஆகியவற்றை உண்டாக்குவார்கள். வீட்டில் சுத்தமாக அன்புடனும் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும இத்தகைய உணவுகளை ஒருவர் ஆரோக்கியம் கருதி தவிர்ப்பது மிக மிக கடினம்தான்.
எனவே, இந்த பண்டிகை தினங்களில் ஒருவர் அதிக இனிப்புகள் மற்றும் எண்ணெயிலான உணவுகளை சாப்பிட்டுவிட்டதாக ஒருவகை ஆரோக்கியம் சார்ந்த குற்ற உணர்ச்சியுடன் உணர்ந்தால் அவர் உடனடியாக இந்த விஷயங்களை செய்து சற்று நிவாரணத்தையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
அதிக இனிப்புகளை சாப்பிட்டுவிட்டதாக ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்கள் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், ஆரோக்கியமான உணவு முறையை மீண்டும் தொடங்குவதன் மூலமும், உங்கள் மனதையும் உடலையும் உற்சாகப்படுத்த முடியும். மேலும், சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் திரவங்களை உட்கொள்வதன் மூலம் நீங்கள் மீண்டு வரலாம். அதுகுறித்து இதில் காணலாம்.
இன்று இனிப்புகளை தவிர்க்கலாம்
இன்று மாட்டு பொங்கல். நேற்று சூரிய பொங்கலுக்கு வாங்கிய கரும்புகள் மிச்சமிருக்கும். அவை இன்று முழுவதுமாக அடித்து நொறுக்கி சக்கை துப்பிவிடலாம் என பலரும் திட்டமிட்டிருப்பீர்கள். நேற்றே அதிக இனிப்புகளை உண்டுவிட்டதாக உங்களுக்கு தோன்றினால், இன்று ‘இந்த கரும்பு திட்டத்தை’ கைவிட்டுவிடலாம். மேலும், நேற்று பொங்கிய சர்க்கரை பொங்கல், பாயாசம் ஆகியவற்றின் ருசியும் உங்கள் நாக்கில் மிச்சமிருக்கும், அதற்காக இன்று அவற்றை உண்டால் அது மேலும் உங்களை சோகத்தில் ஆழ்த்தலாம். எனவே, நேற்று அதிக இனிப்புகளை சாப்பிட்டுவிட்டதாக உங்களுக்கே தோன்றினால், இன்று அவற்றை தவிர்ப்பது நல்லது. அப்படி தோன்றவில்லை என்றால் இன்று அடித்து நொறுக்கிவிடுங்கள்.
நீரேற்றமாக இருங்கள்
அதிக இனிப்புகளை உண்டவர்கள் நீரேற்றமாக தங்கள் உடலை வைத்திருப்பது நல்லது. அதனால், எப்போதும் தண்ணீர், மோர், சர்க்கரை கலக்காத குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, சுட வைத்த நீரை அருந்துவதும் நன்மை பயக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை இன்று முழுமையாக தவிர்க்கவும். அதிலும் அதிக சர்க்கரை கலந்திருக்கும். அவற்றை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான உணவுகளான பயிர்கள், பருப்புகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். சமநிலையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவு வகைகளை உண்பதே சரியாகவும் இருக்கும்.
நடைப்பயிற்சி
தினமும் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், விடுமுறை தினம் என்பதால் பலரும் நடப்பதற்கு யோசனை செய்வார்கள். அந்த யோசனையை தவிர்த்துவிட்டு கொஞ்ச தூரம் பொறுமையாக நடந்தால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரலாம்.