Kalyanavirundhu Rasam : கமகம மணத்துடன் கல்யாண விருந்து ரசம்! குளிருக்கு இதமாய் அடிக்கடி செய்யுங்கள்!
இதுபோல் கமகம மணத்துடன் கல்யாண விருந்து ரசம் செய்தீர்கள் என்றால், உங்கள் பக்கத்துவீட்டில் உள்ளவர்களும் உங்கள் வீட்டில் ரசமா என்று கேட்பார்கள்.
தேவையான பொருட்கள்
- கட்டிப்பெருங்காயம் – 1
- வர மல்லி – ஒரு ஸ்பூன்
- துவரம் பருப்பு – கால் ஸ்பூன்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 3
- பூண்டு – 8 பல்
(முதலில் அடுப்பில் ட்ரை கடாயை சூடாக்கி, அதில் கட்டிப்பெருங்காயம் சேர்த்து நன்றாக பொரிந்தவுடன், வரமல்லி, துவரம் பருப்பு சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
ஆறியவுடன், அனைத்தையும் காய்ந்த மிக்ஸி ஜாரிலோ அல்லது அம்மியிலோ சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்)
இதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக தட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
ரசம் செய்ய தேவையான பொருட்கள்
தக்காளி – 2
பருப்பு வேகவைத்த தண்ணீர் – அரை கப்
ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்றாக கையால் கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பருப்புத்தண்ணீர் மற்றும் இடித்து வைத்து பூண்டு மற்றும் பொடியை சேர்த்து நன்றாக கையால் மசித்துக்கொள்ள வேண்டும்.
இந்த கல்யாண விருந்து ரசத்துக்கு வறுத்து அரைக்கும் மசாலாப்பொடிதான் சிறப்பான சுவையை வழங்குகிறது.
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
புளியை நன்றாக கரைத்து ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கலவையில் சேர்க்க வேண்டும்.
அதில் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் கடாயை சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, கரைத்து வைத்துள்ள ரசத்தை அதில் சேர்க்க வேண்டும்.
பின்னர் அது நன்றாக நுரைத்து வந்தவுடன் இறக்கி சூடாக சாதத்தில் பரிமாற சுவைஅள்ளும்.