மும்பைக்கு எதிராக 404 ரன்கள் குவித்து வரலாறு படைத்த பிரகார் சதுர்வேதி: யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு
கர்நாடகா பேட்ஸ்மேன் பிரகார் சதுர்வேதி மும்பைக்கு எதிரான கூச் பெஹார் டிராபி யு-19 இறுதிப் போட்டியில் 404 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். இதன் மூலம் கூச் பெஹார் டிராபி இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்த 358 ரன்கள் சாதனையை முறியடித்தார். கூச் பெஹார் டிராபி இறுதிப் போட்டியில் முதன் முதலாக 400+ ரன்கள் விளாசி வரலாறு படைத்துள்ளார் பிரகார் சதுர்வேதி.
மும்பை அணி தன் முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு மடிய தொடர்ந்து ஆடிய கர்நாடகா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 890 ரன்களைக் குவித்து வரலாறு படைத்தது. இதில் பிரகார் சதுர்வேதி 46 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 638 பந்துகளில் 404 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். இந்த போட்டி சமனில் முடிந்தது.
யுவராஜ் சிங் 1999-ம் ஆண்டு பிஹார் அணிக்கு எதிராக இதே கூச் பெஹார் டிராபி இறுதியில் 358 ரன்களை விளாசியிருந்தது முந்தைய இறுதிப் போட்டி பேட்டிங் சாதனையாக இருந்தது. ஆனாலும் பிரகார் சதுர்வேதியின் இந்த 404 ரன்கள் ஒட்டுமொத்த பட்டியலில் 2-ம் இடமே பிடித்துள்ளது, காரணம் இதற்கு முன் விஜய் ஸோல் என்ற வீரர் மகாராஷ்ட்ரா அணிக்காக அசாமுக்கு எதிராக 451 ரன்கள் கூச் பெஹார் டிராபியில் குவித்ததுதான் இன்று வரை சாதனையாக நீடித்து வருகிறது.
இந்த இன்னிங்ஸில் சதுர்வேதி 4 நூறு+ ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இதில் ஹர்ஷில் தர்மானியுடன் (169 ரன்கள்) சேர்த்த 290 ரன்கள் அதிகபட்ச கூட்டணியாகும். முதலில் யு-19 அணியில் பிரகார் சதுர்வேதி தேர்வு செய்யப்படவில்லை. இப்போது இந்த இன்னிங்ஸினால் கர்நாடக சீனியர் அணியில் ரஞ்சி டிராபியில் ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்தான் ரஞ்சி டிராபி போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கர்நாடகா 110 ரன்கள் வெற்றி இலக்கை துரத்த இயலாமல் 53 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது நடந்தேறியுள்ளதால், பிரகார் சதுர்வேதி போன்ற ஒரு வீரரை கர்நாடகா எதிர்நோக்கியுள்ளது.
ஆனால், நல்ல திறமையுள்ள இந்த பிரகார் சதுர்வேதி இந்தியா யு-19 உலகக் கோப்பை அணியிலும் இடம்பெறவில்லை. நிறைய ஏமாற்றங்களுக்கு பிறகு ஒரு இளம் வீரர் மீண்டெழுந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை அணியில் தேர்வு செய்யாமல் விட்டு விட முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். சதுர்வேதியின் குடும்பம் படித்தவர்கள் நிரம்பிய குடும்பமாகும். இவரது தந்தை பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினியர், தாய் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் விஞ்ஞானி.
பிரகார் சதுர்வேதி தன் கல்வியுடன் சேர்ந்து 80 கி.மீ பயணம் செய்து கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தியவர். இவரது திறமையெனும் பனிமலையின் ஒரு முகடு மட்டுமே இந்த இன்னிங்ஸில் தெரிந்ததாக பயிற்சியாளர் ஜெஸ்வந்த் பெருமையுடன் கூறுகிறார்.