தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்
உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மாட்டுப் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கலின் இரண்டாம் நாளான இன்று கால்நடைகளை போற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடு மற்றும் ஆடு வளர்ப்போர் அவற்றை சுத்தம் செய்து, கொம்புகளை சீவி, வர்ணம் பூசி, சலங்கை கட்டி அலங்கரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
பொங்கல்தினத்தன்று பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டதைப் போல, இன்றும் பொங்கல் வைத்து கால்நடைகளை வழிபட்டு உழவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதே போல், தஞ்சை பெருவுடையார் கோயில் பெருநந்திக்கு மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பெருநந்திக்கு சிறப்பு அலங்காரத்துக்காக ஆயிரம் கிலோ காய் – கனிகள் மற்றும் இனிப்பு வகைகள் கொண்டுவரப்பட்டன.