புதிய பஜாஜ் சேத்தக் பிரிமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது? இதோ முழு ரிவியூ!
பஜாஜ் நிறுவனம் தனது சேத்தக் என்ற பிரபலமான ஸ்கூட்டரின் பெயரை தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கடந்த 2019ம் ஆண்டு வைத்தது . அது மட்டுமல்லாமல் பழைய ஸ்கூட்டரில் உள்ள அதே ரெட்ரோ லுக் உடன் இந்த ஸ்கூட்டரை மாசு ஏற்படுத்தாத ஸ்கூட்டராக தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது முதல் பலர் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்க துவங்கி விட்டனர்.
என்னதான் பஜாஜ் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் தனது காலடி தடத்தை பதித்திருந்தாலும் தொடர்ந்து மார்க்கெட்டில் சிறந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. மார்க்கெட்டில் உள்ள ஏத்தர்,ஓலா போன்ற புதிய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமான நிலையில் அதை அப்டேட் செய்து வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி பஜாஜ் நிறுவனம் புதிதாக சேத்தக் பிரிமியம் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியது. பெங்களூருவில் அதை ஓட்டி பார்க்க எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்தது. அதன்படி டிரைவ்ஸ்பார்க் குழுவும் நேரடியாக சென்று இதை ஒட்டிப் பார்த்தோம். இதன் விமர்சனத்தை இங்கே காணலாம் வாருங்கள்.
புதிய பஜாஜ் சேத்தக் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை இரண்டு வெர்ஷன்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. பழைய ஸ்கூட்டரிலிருந்து புதிய பவர் ஃபுல்லான ஸ்கூட்டராக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பல தொழில்நுட்ப அம்சங்களும் இதில் உட்பகுத்தப்பட்டுள்ளன.
தொழில்நுட்பம்சங்களை பொருத்தவரை புதிய 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதை சுற்றியும் லைட்டுகள் வரிசையாக இருக்கும் படி அரே லைட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இது போக வழக்கமாக உள்ள அம்சங்களான ரிவர்ஸ் மோட், இண்டிகேட்டர் லைட்டுகள், ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக வழங்கப்பட்டுள்ள 5 இன்ச் மல்டி கலர் டிஸ்ப்ளே பிரைட்டாக இருக்கிறது. இதில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக இது 4ஜி கனெக்ட் அம்சத்துடன் வருகிறது. இதனால் இண்டர்நெட் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அம்சம் இதில் இடம் பெற்றுள்ளது.
மேலும் எந்த மோடில் நீங்கள் ரைடு செய்கிறீர்கள் என்ற தகவலும் இதில் இடம் பெற்றுள்ளது.இது போக ரேஞ்ச், ஸ்பீடு, தேதி, நேரம், ஆகிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மியூசிக்கை கண்ட்ரோல் செய்வது, போன் காலை அட்டென்ட் செய்வது போன்ற அம்சங்களும் உள்ளன.
இதுபோக சேத்தக் பிரீமியம் எலெக்டரிக் ஸ்கூட்டரில் இண்டிகேட்டர்களை தானாக கேன்சல் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோக எலக்ட்ரானிக் ஹேண்டில் லாக், சீட் ஓப்பனிங் ஸ்விட்ச், 18.5 லிட்டர் கொண்ட சீட்டிற்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ், 5 லிட்டர் அளவு கொண்ட கிளவ் பாக்ஸ் ஆகியன இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பஜாஜ் ப்ரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 126 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 650 வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் மோட்டாரை பொருத்தவரை 5.63 பிஎச்பி பவரையும் 22.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய சேத்தக் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 73 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்போர்ட்ஸ், ஹில் ஹோல்டு, சீக்வென்ஷியல் பிளிங்கர்ஸ், ரிவர்ஸ் மோடு, ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல ஆப்ஸன்களை கூடுதலாக வழங்கவும் பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்டால் ரூபாய் 9000 அதிகமாக செலுத்தி இந்த ஆப்ஷன்களை பெற முடியும்.
டிரைவிங் இம்ப்ரஷன்: பழைய ஸ்கூட்டரிலிருந்து புதிய ஸ்கூட்டரில் பவர்டிரெயின் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பழைய ஸ்கூட்டரை விட இது வேகமாக பிக்கப் செய்கிறது. முக்கியமாக யாரும் இல்லாத சாலைகளில் வேகமாக பயணிக்க முடிகிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் 55கிலோமீட்டர் வேகம் வரை தாராளமாக பயணிக்க முடிகிறது. எக்கோ மோடை பொருத்தவரை சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு பேட்டரி அளவு குறைவாக இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் அதை பயன்படுத்துவது உகந்ததாக தெரியவில்லை.
ரிவர்ஸ் கியர் ஆப்ஷன் சிறப்பாக வேலை செய்கிறது. இதனால் நீங்கள் உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சுலபமாக பார்க்கிங்கில் நிறுத்த முடியும். அதை இறங்கி தள்ள வேண்டியது இல்லை. நீங்கள் சீட்டில் அமர்ந்தபடியே வாகனத்தை ரிவர்ஸ் கியரில் இயக்கலாம். இதன் சஸ்பென்ஷன் சிஸ்டம் சற்று கடினமான அளவில் இருப்பதாக நமக்கு தெரிகிறது. ஆனால் சீட் சொகுசாக இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாதிரியான நகர்ப்புற சாலைகளில் பயணிக்க சேத்தக் பிரிமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பாக இருக்கிறது. பெங்களூர் மாதிரி அதிக டிராபிக் உள்ள சாலைகளில் சுலபமாக இந்த ஸ்கூட்டரால் பயணிக்க முடிகிறது. அதுவும் 134 கிலோ வரை எடை எடுத்துச் சென்றாலும் எந்த விதமாக பிரச்சனையும் இல்லாமல் இந்த ஸ்கூட்டரை ஓட்டி செல்ல முடிகிறது. இதன் வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லலாம்.
2024 சேதக் பிரீமியம் ஸ்கூட்டரை பொறுத்தவரை முன் பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது காம்பி பிரேக்கிங் சிஸ்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஓட்டி செல்லும்போது இந்த பிரேக்கிங் சிஸ்டம் ஹைப்பர் ஆக்டிவாக இருப்பது போல நமக்கு தெரிந்தது.
இது நாங்கள் ஓட்டிய ஸ்கூட்டரில் மட்டும் இருக்கும் பிரச்சனையா இல்ல அல்ல அனைத்து ஸ்கூட்டர்களிலும் இந்த பிரச்சனை இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக இதை ஓட்டி பார்க்கும்போது எந்தவித பெரிய சிக்கல்களும் இல்லாமல் செயல்பட்டது. முக்கியமாக முன்பக்க டிஸ்க் பிரேக் சிறப்பாக செயல்பட்டு என்றே சொல்ல வேண்டும்.
இறுதி தீர்ப்பு: பஜாஜ் சேத்தக் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொறுத்தவரை பழைய ஸ்கூட்டரில் இருந்து பல்வேறு மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக ரேஞ்ச், டிஸ்ப்ளே உள்ளிட்ட ஆப்ஷன்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதன் ரெட்ரோ லுக், மெட்டல் பாடி, சொகுசான சீட்டுகள் எல்லாம் எந்த மாற்றங்களும் இல்லாமல் அப்படியே வழங்கப்பட்டுள்ளன.
இதன் விலையை பொருத்தவரை ரூபாய் 1.53 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை சற்று அதிகமாக தெரிகிறது. ஸ்கூட்டர் அதன் பெயருக்காக நல்ல விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதே நிலையில் இதை விட சிறப்பான ஸ்கூட்டர்கள் எல்லாம் மார்க்கெட்டில் உள்ளன. ஆனால் நீங்கள் பழைய கால வைபில் இருக்க வேண்டுமென்றால் இந்த ஸ்கூட்டரை நீங்கள் நிச்சயம் தேர்வு செய்யலாம்.
நீங்கள் இந்த ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் வாங்குவதற்கு முன்னர் உங்கள் ரைடிற்குக்கு ஏத்த மாதிரி இருக்கிறதா என்பதை ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு உங்கள் முடிவை எடுங்கள். மார்க்கெட்டில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களையும் ஒரு தடவை செய்துவிட்டு உங்கள் முடிவை எடுப்பது தான் சரியாக இருக்கும்.