காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநர் போட்ட பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை
சனாதனத்துக்கு ஆதரவாக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திராவிட மாடல் ஆட்சியை முன்னிறுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. கோப்புகள், சட்டமன்றம் நிறைவேற்ற மசோதாக்கள் உள்ளிட்டவற்றிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்துவருவதாக குற்றஞ்சாட்டியதுடன், உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு.
அந்த வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, கடந்த மாதம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதலமைச்சர் ஸ்டாலினும் சந்தித்து பேசினர். இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை கூறியது. இதன் மூலம் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து சனாதன துறவி என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், ”திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்பிற்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். முழு மனித குலத்திற்கும் வழிகாட்டுதலாகவும் உத்வேகமாகவும் திருக்குறள் இருக்கிறது.” இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனது மனைவியுடன் திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.