அயலானா, கேப்டன் மில்லரா…. மூன்றுநாள் வசூலில் முந்தியது யார்?
பொங்கலை முன்னிட்டு வெளியான அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1, மெரி கிஸ்துமஸ் ஆகிய நான்குப் படங்களில் மிஷன், மெரி கிறிஸ்துமஸ் படங்கள் நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ளன.
அயலான், கேப்டன் மில்லருக்கு கலவையான விமர்சனங்கள். பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதற்கு நேர்மாறாக உள்ளது. அயலான், கேப்டன் மில்லர் முன்னிலை வகிக்க மற்ற இரு படங்கள் பின்தங்கியுள்ளன. அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் மிஷன் சேப்டர் 1 இப்போது பல இடங்களில் பிக்கப்பாகியுள்ளது.
தனுஷா, சிவகார்த்திகேயனா என்ற போட்டி அவர்களுக்குள்ளும், அவர்களின் ரசிகர்களுக்குள்ளும் நீண்டகாலமாக இருந்து வந்தது. கேப்டன் மில்லரின் டிசம்பர் வெளியீட்டை பொங்கலுக்கு தனுஷ் தள்ளி வைக்க, இந்தப் போட்டி இன்னும் சூடுபிடித்தது. இரு படங்களும் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருக்கும் நிலையில், முதல் மூன்று தினங்களில் இரு படங்களின் வசூல் நிலவரங்களை ட்ரேட் அனலிஸ்டுகள் வெளியிட்டுள்ளனர்.
கேப்டன் மில்லர் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல்நாளில் 6.5 கோடி ரூபாய் வசூலித்தது. சனி மற்றும் ஞாயிறில் தலா 7.5 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் மூலம் முதல் மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 21.5 கோடிகளை கேப்டன் மில்லர் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
அயலான் 12-01-24 முதல் நாளில் 3.5 கோடிகளும், சனிக்கிழமை இரண்டாம் நாளில் 4.35 கோடிகளும், ஞாயிறன்று 5.5 கோடிகளுமாக மொத்தம் 13.35 கோடிகளை வசூலித்துள்ளது. உலக அளவில் கேப்டன் மில்லர் 37 கோடிகளையும், அயலான் 27 கோடிகளையும் கடந்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, வடஇந்தியா, வெளிநாடு என அனைத்துப் பகுதிகளிலும் முதல் மூன்று தினங்கள் கேப்டன் மில்லரே முன்னிலை வகித்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.