Rajinikanth – போயஸ் கார்டன் ‘அம்மா’ என்றாலே ரஜினிக்கு பீதிதான்.. வைத்து செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு முன்பு நேற்ற் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்கள் கூடினர். அப்போது ரஜினியின் பக்கத்து வீட்டு பெண் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி ட்ரெண்டானது. இந்த சூழலில் அந்த விவகாரத்தை வைத்து ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த்தை கிண்டல் செய்திருக்கிறார்.

ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, ‘மீசை வைத்த குழந்தையப்பா’ என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினி ரசிகர்கள்: இதற்கிடையே ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாள், ஏதேனும் பண்டிகை தினம் வந்தால் ரஜினியின் வீட்டுக்கு முன்பு குவிந்துவிடுவார்கள். அப்படித்தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் அவரது வீட்டுக்கு முன்பு குவிந்தார்கள். அப்போது ரஜினியின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் வெளியே வந்து, நல்ல நாளில்கூட நிம்மதியாக இருக்க முடியுறது இல்லை. இதே வேலையா போச்சு என்று சரமாரியாக ரசிகர்களை விமர்சித்தார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.

ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்: இந்நிலையில் இந்த விவகாரத்தை வைத்து ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் வீட்டு மெயின் கேட்டில் இருந்து பல அடி தூரத்தில் ரசிகர்களை நிறுத்தி… கேட் பின்புறம் ஸ்டூலில் ஏறி கும்பிடு போடுவது தலீவரின் வழக்கம். ஆகவே.. பக்கத்துவீட்டு அருகில் ரசிகர்கள் நிற்பார்கள். நேற்று நடந்த சம்பவத்தில்.. பக்கத்து வீட்டார் அதிகாலையில் எழுந்து மணிக்கணக்கில் போட்ட பொங்கல் கோலத்தை ரசிக குஞ்சுகள் கால்களால் மிதித்து கலைத்து விட்டார்கள்.

அந்த அம்மா குடும்பத்துடன் இறைவனை வணங்கும்போது..டைமிங்காக.. தலைவர் வெளியே வந்து வணக்கம் போட.. ‘தலைவா தலைவா’ என கோஷம்.‌ அம்மாவால் நிம்மதியாக உள்ளே கும்பிடவும் இயலவில்லை. வெளியே வந்து பார்த்தால் கோலம் அலங்கோலமாகி இருந்தது. அந்த அம்மா அப்படியே ரஜினி வீட்டு வாசலை பார்த்தார். அது.. சற்றும் கலையாமல் ஜம்மென்று இருந்தது.

அதன்பிறகுதான் தலீவருக்கும், ரசிக குஞ்சுகளுக்கும் பொங்கல் வைத்து அதிரடி காட்டினார் அந்த அம்மா. போயஸ் கார்டன் அம்மா என்றாலே தலைவருக்கு எப்போதும் பீதிதான் எனும் வரலாறு தொடர்கிறது” என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கும், ரஜினிகாந்த்துக்கும் 90களில் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை இறைவனால்கூட காபபாற்ற முடியாது என ரஜினிகாந்த் ஓபனாக பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *