ராமர் கோவில் திறப்பு விழா.. ராமேஸ்வரம் சுற்று வட்டார மக்களிடம் முழு உற்சாகம்- ஆளுநர் ரவி பெருமிதம்
சென்னை: ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுவது ராமாயண புராண கதைகள் நிறைந்த ராமேஸ்வரம் சுற்றுவட்டார மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா பல்வேறு சர்ச்சைகளின் மையமாகவும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
சங்கராச்சாரியார்கள் அதிருப்தி: அயோத்தியில் ராமர் கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமலேயே திறக்கப்படுகிறது; அயோத்தியில் ராமர் கோவில் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யக் கூடாது என 4 சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் எனவும் 4 சங்கரச்சாரியார்கள் அறிவித்தும் உள்ளனர்.
திமுக எதிர்ப்பு: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்கப் போவது இல்லை என அறிவித்துள்ளன. ராமர் கோவில் திறப்பு நிகழ்வை மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியலாக்குகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் இறை நம்பிக்கை ஒருவரது ஆன்மத் தேடல்; தனிப்பட்ட உரிமை. அரசியல் அணி திரட்டவும், வாக்கு வங்கிக்காகவும் பக்தியை மூலதனமாக வைத்து, மக்களின் நம்பிக்கையில் அரசியல் செய்வது இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிரானது; அரசியல் சாசன அறத்துக்கு மாறானது; நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது அல்ல! இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் விருப்பமும் உரிமையும் ஆகும். ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல, ஆன்மிக அறங்களுக்கே எதிரானது ஆகும்.
கோயில் கட்டுவதையும், திறப்பதையும் தனது கட்சியின் சாதனையாகக் காட்டி மக்களை ஏமாற்ற ஒன்றிய பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆன்மிகத் திருவிழாவை பாஜக-வின் அரசியல் திருவிழாவாக மாற்ற நினைப்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புறந்தள்ளுவார்கள் என விமர்சித்துள்ளது.