PMAY-G திட்டத்தின் முதல் தவணையை வெளியிட்ட பிரதமர் மோடி.!
நேற்று (ஜனவரி 15,2024) பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் 1 லட்சம் மக்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கி உள்ளார்.
பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM – JANMAN)-ன் ஒரு பகுதியான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY – G) திட்டத்தின் முதல் தவணையை பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் 1 லட்சம் பயனாளிகளுக்கு வெளியிட்டுள்ளார்.
PM-JANMAN பயனாளிகளுடன் உரையாடிய பிரதமர், PM-JANMAN மகா அபியானின் குறிக்கோள் பழங்குடியின சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசாங்கத் திட்டங்களின் மூலம் பயனடைவதை உறுதி செய்வதாகும் என்றார். சமுதாயத்தில் பின் தங்கியோர் என யாரும் இல்லாமல் அரசு வழக்கும் திட்டங்களின் பலன்கள் அனைவரையும் சென்றடையும் போது தான் நாடு வளர்ச்சி அடையும் என்றார்.
மிகவும் பின்தங்கிய பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த சுமார் 30,000 விவசாயிகளை பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் அரசு இணைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை (நவம்பர் 15-ஆம் தேதியை) பழங்குடியினர் பெருமை தினமாக (Tribal Pride Day) அறிவித்தது. இந்த நிலையில் 2023-ஆம் ஆண்டு பழங்குடியினர் பெருமை தினத்தின் போது PM-Janman தொடங்கப்பட்டது.
ரூ.24,000 கோடி ஆரம்ப பட்ஜெட்டில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் (PVTGs) சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை இந்த PM – JANMAN திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கத்தில் PVTGs-களுக்கு பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர், மின்சாரம், சுகாதாரம், மேம்பட்ட கல்வி, சுகாதாரம், நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் போதுமான ஊட்டச்சத்து அணுகல் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மக்கள் தொகை 10.45 கோடியாக உள்ளது, இதில் 18 மாநிலங்களில் உள்ள 75 சமூகங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசம் ஆகியவை PVTGs-ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.