மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறுவார்களா? மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும்?
டெல்லி: மாலத்தீவு நாட்டில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் மொய்சு பகிரங்கமாக கெடு விதித்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் மொய்சு விதித்த மார்ச் 15-ந் தேதி கெடுவுக்குள் இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேறுமா? மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய பெருங்கடலில் உள்ள மிக குட்டி நாடு மாலத்தீவு. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது மாலத்தீவு. இதனால் இந்தியா, சீனா நாடுகளின் தாக்கம் மாலத்தீவு அரசியலில் உள்ளது.
மாலத்தீவு அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கோஷமும் இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை வெளியேற்றுவோம் என வாக்குறுதி தந்த மொய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அதிபரானது முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். அத்துடன் சீனாவுடன் மிக நெருக்கமான உறவையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் மாலத்தீவின் அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்தனர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த பின்னணியில் மாலத்தீவு நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவத்தினர் அனைவரையும் மார்ச் 15-ந் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என அந்நாட்டு அதிபர் மொய்சு கெடு விதித்துள்ளார். மாலத்தீவு நாட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்புக்காக துருவ் ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானம் ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியது. இவற்றை கையாள்வதற்காக ராணுவ வீரர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த ராணுவ வீரர்களைத்தான் உடனே வெளியேற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளது மாலத்தீவு.
இருந்த போதும் இதுவரை மத்திய அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. மாலத்தீவுடனான உறவு விரிசலடைந்துவிட்ட நிலையில் ராணுவத்தினரை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசு எத்தகைய முடிவை எடுக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மாலத்தீவில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களும் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.