சனிப்பெயர்ச்சி… சங்கடம் தீர்ப்பாரா சனீஸ்வர பகவான்…
சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைந்ததையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ஈஸ்வரனுக்கு இணையான பட்டத்தை பெற்றவர் சனீஸ்வர பகவான் ஆவார். ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனீஸ்வர பகவான் சூரியனுக்கும் சாயதேவிக்கும் பிறந்தவர் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சனி பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார். நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே சொந்தக்காரர் இந்த சனி பகவான்தான்.
இவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஏழரைச்சனி, மங்கு சனி, தங்கு சனி, பொங்குசனி என்று பிரித்துப் பலன் சொல்வதுண்டு.
இந்த நிலையில், இன்று மாலை 5.23 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். சனிப்பெயர்ச்சியையொட்டி, பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, லட்சார்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றன. சரியாக 5.20 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு மகா தீபம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்னும் சில தகவல்கள்:
பிடித்த நிறம் : கறுமை – கருநீலம்
உலோகம் : இரும்பு
மலர் : வன்னி, கருங்குவளை
ரத்தினம் : நீலம்
திசை : மேற்கு
நட்சத்திரங்கள் : பூசம், அனுஷம், உத்திராடம்
காரகம் : ஆயுள்
பிணி : வாதம் தொடர்பானவை
ராசியில் சஞ்சரிக்கும் காலம் : இரண்டரை வருடங்கள்
தானியம் : எள்
பஞ்சபூதம் : வாயு
நட்பு கிரகங்கள் : புதன், சுக்கிரன்
பகைக் கிரகங்கள் : சூரியன், சந்திரன்
ஆட்சி வீடு: மகரம், கும்பம்
“சனி பகவானை வணங்கும்போது உச்சரித்தால் அருள் கிட்டும்”
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
சனிப்பெயர்ச்சியின் போது, தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.