ஆந்திராவின் லேபாக்ஷியில் உள்ள வீர பத்ரா கோவிலில் இன்று பிரார்த்தனை செய்கிறார் பிரதமர் மோடி..
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு செல்ல உள்ளார். மேலும் ஆந்திர மாநிலம், லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்ய உள்ளார்.. மேலும் தெலுங்கில் உள்ள ரங்கநாத ராமாயணத்தின் வசனங்களையும் அவர் கேட்க உள்ளார். அயோத்தி ராமர் கோயிலின் பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா நடைபெற இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில், ராமாயணத்தில் சிறப்பு வாய்ந்த லெபாக்ஷிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.
சீதா தேவியை கடத்திச் சென்ற ராவணனால் படுகாயமடைந்த ஜடாயு பறவை விழுந்த இடம் லேபாக்ஷி என்று கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில் இருந்த ஜடாயு தான் பகவான் ஸ்ரீ ராமரிடம், ராவணனால் சீதை தெற்கே அழைத்துச் செல்லப்பட்டதாக கூறியது, பின்னர் ஜடாயுவுக்கு ராமரால் மோட்சம் வழங்கப்பட்டது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாசிக்கில் உள்ள ஸ்ரீ கலா ராம் கோயிலில் பிரார்த்தனை செய்தார். நாசிக்கில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பஞ்சவடிக்கு பிரதமர் மோடி சென்றார். அவர் கலா ராமர் கோயிலில் பிரார்த்தனை செய்தார் மற்றும் மராத்தியில் ராமாயணத்தில் இருந்து பகவான் ராமின் அயோத்தி ஆக்மான் தொடர்பான வசனங்களைக் கேட்டார். இந்த சூழலில் அவர் லேபாக்ஷி செல்ல உள்ளார்.
ஆந்திராவில் பிரதமர் மோடி
தனது பயணத்தின் போது பிரதமர் மோடி ஆந்திராவில், அபெக்ஸ் பயிற்சி நிறுவனத்தை திறந்து வைக்க உள்ளார். அதன்படி இன்று பிற்பகல், பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமி (NACIN) நிறுவனத்தைத் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவைத் தொடர்ந்து, புகழ்பெற்ற லேபாக்ஷி கோவிலுக்கு அவர் செல்கிறார். பின்னர், திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மோடி பாலசமுத்திரம் வருகிறார்.
கேரளாவில் பிரதமர் மோடி
செவ்வாய்க்கிழமை மாலை, பிரதமர் மோடி கொச்சி செல்லும் பிரதமர், மாலை 5 மணிக்கு மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் இருந்து விருந்தினர் மாளிகை வரை 1.3 கி.மீ சாலை வழியாக பேரணி நடத்த உள்ளார். அம்மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயில் மற்றும் திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயில் ஆகிய இரண்டு முக்கிய கோயில்களுக்கு அவர் செல்ல உள்ளார். புதன்கிழமை காலை, நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமண விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
பின்னர், ‘சக்தி கேந்திரங்களின்’ பொறுப்பாளர்களான 6,000 பணியாளர்களுடன் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்க உள்ளார், ஒவ்வொருவரும் இரண்டு முதல் மூன்று பூத் அளவிலான பகுதிகளை மேற்பார்வையிடுகின்றனர். கொச்சியில் இருக்கும் போது மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் நாளை மாலைக்குள் டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.