Palamedu Jallikattu 2024 : பரபரக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு; காவலர்கள் உள்பட 24 பேர் காயம்
தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை ஜல்லிக்கட்டு திருவிழாவின் இரண்டாம் நாள் விழா பாலமேட்டில் நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆற்று வெளியில் நடைபெறுவதால் இங்குள்ள மிக விசாலமான களத்தில் வீரர்களுக்கும், காளைகளுக்கும் உற்சாகத்துடன் களமாடி வருகின்றனர். கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட பிறகு, சீறி பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் அடக்கி பிடித்து வருகின்றனர்.
இப்போட்டியில் விளையாட 3677 காளைகளும், 1412 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், இதில் தகுதியுள்ள 1000 காளைகளுக்கும், 700 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் முதல் வீரருக்கும், காளைக்கும் தலா 1 கார் பரிசும், இரண்டாம் வீரருக்கு பைக்கும், இரண்டாம் காளைக்கு கன்றுடன் பசு மாடும் பரிசாக வழங்கப்படும்.
சிறப்பாக விளையாடும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்களும், பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 5 சுற்றுகள் முடிவில் 250 வீரர்கள் களம் இறங்கி விளையாடினர். சிறப்பாக ஆடிய வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மொத்தம் 6 சுற்றுகள் முடிவில் 540 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 10 மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் 7 பேர், பார்வையாளர்கள் 5 பேர், 2 சார்பு ஆய்வாளர்கள் படுகாயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 3 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், தென்காசி மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜேம்ஸ், காளை சேகரிக்கும் இடத்தில் நின்றிருந்த போது வெளியில் வந்த காளை இடுப்பில் முட்டியதில் காயம் அடைந்தார்.
பார்வையாளர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க இரண்டடுக்கு கம்புகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி தலைமையில் சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.