9 மாதத்தில் 11,704 மில்லியன் யூனிட் – தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!
கோவை: தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 11,704 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, காற்றாலை மின் உற்பத்தி, தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். காற்றாலைகள் மூலம்உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தின் மொத்த காற்றாலை மின் உற்பத்திக் கட்டமைப்பு 10,124 மெகா வாட். இதில் தமிழக அரசின் மின்வாரிய கிரிட்டுடன் 8,621 மெகா வாட் கட்டமைப்பு இணைக்கப் பட்டுள்ளது. காற்றாலை சீசன் குறிப்பிட்ட 7 மாதங்கள் மட்டுமே இருந்தாலும், நிதியாண்டு அடிப்படையில் தான் மொத்த மின் உற்பத்தி கணக்கிடப் படுகிறது. கடந்த 2021 ஏப்ரலில் தொடங்கி 2022 மார்ச் வரையிலான நிதியாண்டில் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.
2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 12,509 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 11,704 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிதியாண்டு நிறைவடையும் மார்ச் மாதத்துக்குள் 12 ஆயிரம் மில்லியன் யூனிட் என்ற அளவைக் கடப்பதுடன், கடந்த நிதியாண்டைவிட கூடுதலாக இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.