இணையத்தில் பிரித்தானிய பிரதமரின் 143 Deepfake வீடியோக்கள்: உருவாகியுள்ள அச்சம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் deepfake வீடியோக்கள் என்னும் போலி வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ள நிலையில், தற்போது, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் 143 deepfake வீடியோக்கள் பேஸ்புக்கில் மட்டும் வெளியானது தெரியவந்துள்ளது.
பிரித்தானிய பிரதமரின் Deepfake வீடியோக்கள்
கொஞ்சம் காலத்துக்கு முன்பு, அரைகுறை ஆடையிலிருக்கும் ஒரு நடிகையின் புகைப்படத்துடன் யாராவது ஒரு அப்பாவிப்பெண்ணின் முகத்தை இணைத்து, அல்லது யாரோ ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் பிரபலமாகிவரும் ஒரு நடிகையின் முகத்தை மட்டும் இணைத்து போலியான புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உருவாக்கி வந்தது ஒரு கூட்டம்.
தற்போது AI என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் முகத்தை மட்டுமல்ல, குரலையும் பயன்படுத்தி, வீடியோக்களையே வெளியிட்டு வருகிறார்கள்.
அவ்வகையில், சமீபத்தில் இந்த சிக்கலில் சிக்கியுள்ளவர் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் ஒன்றை ரகசியமாக பயன்படுத்தி எக்கச்சக்கமாக ரிஷி லாபம் பார்த்துவருவதாக, பிபிசி தொலைக்காட்சியில் ஒருவர் செய்தி வாசிப்பது போல ஒரு வீடியோ பரவி வருகிறது.
மற்றொரு வீடியோவில், எலான் மஸ்க் உருவாக்கியுள்ள பங்குச் சந்தை தொடர்பான ஒரு திட்டத்தில், அரசு பணத்தை முதலீடு செய்து சோதித்துப் பார்க்க முடிவு செய்துள்ளதாக ரிஷி கூறும் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி 143 deepfake வீடியோக்கள், பேஸ்புக்கில் மட்டும் வெளியானது தெரியவந்துள்ளது.
உருவாகியுள்ள அச்சம்
பேஸ்புக் மூலமாக இத்தகைய போலி வீடியோக்கள் 400,000 பேரை சென்றடைந்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பிரச்சினை என்னவென்றால், இந்த ஆண்டின் இரண்டாவது பகுதியில், பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இப்படி போலி வீடியோக்கள் லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் நிலையில், அரசு மற்றும் அரசியல்வாதிகளை குறித்து போலியாக வீடியோக்கள் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படுமானால், அவை, தேர்தலில் பெரும் குழப்பங்களை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.